தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
நாட்டிலேயே அதிகபட்சமாக பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிராவுக்கு ரூ.2,984 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாதிப்பு இருப்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்ட போதிலும் தமிழ்நாட்டுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட பேரிடம் நிவாரணம் குறித்து கம்யூனிஸ்ட் எம்.பிக்கள் சுப்பராயன், செல்வராஜ் ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்துள்ளார். அதில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மட்டும் தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டில் ரூ.276 கோடி வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே அதிகபட்சமாக பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிராவுக்கு ரூ.2,984 கோடி வழங்கப்பட்டுள்ளது. பொருள் சேதம் குறைவாக உள்ள மகாராஷ்டிராவுக்கு நிதி வழங்கியுள்ள மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கவில்லை என எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன.
மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்துக்கு ஒரே தவணையில் ரூ. 1,748 கோடியை மாநில பேரிடர் நிதியாக மத்திய அரசு வழங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு நடப்பாண்டில் ரூ. 14,878 கோடியை மாநில பேரிடர் நிதியாக மத்திய அரசு வழங்கியுள்ளது.
நடப்பாண்டில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் பங்காக ரூ.944.8 கோடியும் மாநில அரசின் பங்காக ரூ.315.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024 - 25ல் ரூ.1,260 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை ஒரு ரூபாய் கூட தமிழ்நாட்டுக்கு மாநில பேரிடர் நிதி வழங்கப்படவில்லை.
மேலும் நடப்பாண்டில் மழை வெள்ள பாதிப்பால் தமிழ்நாட்டில் நவம்பர் 27வரை 37 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்பால் 870 வீடுகள் சேதம் அடைந்ததுடன் 5,521 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன எனத் தெரிவித்துள்ளது.
9 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்படிருப்பதாகவும் அமைச்சர் அளித்த பதிலில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைக்கு ரூ.2000 கோடி நிதி தேவை என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும் 1.5 கோடி தனி நபர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மீட்பு நடவடிக்கைக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.