முதல்வர் ஸ்டாலின் பொய் கூறுகிறார்; மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள் - அன்புமணி
ஆந்திராவில் பிற்படுத்தபட்டோருக்கு வேலைவாய்ப்பு, கடன் உதவிகள் திட்டம் உள்ளது. ஆனால் நாங்கள் வலியுறுத்தியும் தமிழகத்தில் நடைபெறவில்லை.

தஞ்சாவூர்: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்தும் முதல்வர் ஸ்டாலின் பொய் கூறுகிறார். இதற்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள் என்று தாராசுரத்தில் நடந்த சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதியில், வன்னியர் சங்கம் சார்பில், சோழமண்டல சமய – சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி தலைமை வகித்தார். மாநாட்டுக்குழு தலைவர் ம.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். பா.ம.க., கெளரவத் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஜி.கே.மணி வாழ்த்திப் பேசினார்.
விழாவில், பா.ம.க., தலைவரும், எம்.பி.,யுமான அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: ராமதாசின் இலக்கு நமக்கு சமூகநீதி வேண்டும். இம்மாநாடு டிரெய்லர் தான். மெயின் பிக்சர் மே.11ம் தேதி மாமல்லபுரத்தில், நடைபெற உள்ளது. நாம் யாருக்கும் எதிரி கிடையாது. நமக்கும் யாரும் எதிரி கிடையாது. ஏழ்மை, அறியாமை, மது, போதை தான் நமக்கு எதிரி. இதை அழிக்க வேண்டும் என போராடி வருகிறோம். தி.மு.க., இரண்டு சமுதாயத்தை பிரித்து ஆட்சிக்கு வருகிறார்கள். நாம் எல்லோரும் ஒன்று இணைய வேண்டும்.

முதல்வர் ஸ்டாலினிடம் கேட்பது, தமிழகத்தில் ஜாதி வாரி கணகெடுப்பை நடத்தி, நுாறு சதவீத மக்களுக்கும் இட ஓதுக்கீட்டை வழங்குங்கள் என்பது தான். ஆனால், முதல்வர் ஸ்டாலின் ஜாதிவாரி கணகெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறுகிறார். எங்களிடம் அந்த அதிகாரம் இல்லை என்றால் கூட, அந்த அதிகாரத்தை உருவாக்குவோம். இது சமூக நீதி பிரச்சனை. ஆனால், முதல்வர் ஸ்டாலின் அதிகாரம் இருந்தும் பொய் சொல்லி வருகிறார். நிச்சயம் மக்கள் உங்களுக்கு பாடம் புகுட்டுவார்கள். இதில் சந்தேகம் வேண்டாம். தமிழகத்தில், அனைத்து பின்தங்கிய சமூகத்தினரும் ஒன்று சேர்ந்துக்கொண்டு வருகிறார்கள். வரும் தேர்தலில், நிச்சயமாக பிரதிபலிக்கும். தமிழகத்தில் 69 சதவீத விழுக்காட்டை காப்பாற்ற, ஜாதிவாரி கணகெடுப்பை நடத்த வேண்டும்.
கருணாநிதிக்கு ஜாதிவாரி கணகெடுப்பை நடத்த மனமிருந்தது. அதனால் தான் ராமஸ்தாசுடன் இணைந்து சமூகநீதிக்காக பல விஷயங்களை கருணாநிதி செய்தார். ஆனால், அதிகாரம், நிதி, சட்டம் இருந்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு அந்த உணர்வும், மனமும் இல்லை. அனைத்து சமுதாயமும் ஒற்றுமையாக முன்னேறினால் தான், தமிழகம் முன்னேற்றம் அடையும். இது தான் உண்மையான முன்னேற்றம்.
பின் தங்கியவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு பெற்றதால் ஜாதி ஒழியும். ஜாதியை வைத்து அரசியல் செய்ய எங்களுக்கு விரும்பம் இல்லை. விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கு பாதுகாவலர் இருப்பவர் ராமதாஸ். டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக சட்டத்தை கொண்டு வந்தவர் ராமதாஸ். இவ்வாறு அவர் பேசினார்.
பா.ம.க, நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: அனைத்து சமூகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். யாரையும் ஒடுக்ககூடாது. இந்தியாவில், 4,694 ஜாதிகளும், தமிழகத்தில் 364 ஜாதிகளும் உள்ளன. இந்த 364 ஜாதிகளும் முன்னேறினால் தான். தமிழகம் முன்னேறும். ஒரு சமத்துவமான சமூகத்தை அடைய முடியும். இதனால்தான் ஜாதிவாரி கணகெடுப்பை நடத்த வேண்டும் என்கிறோம்.
ஆந்திராவில் பிற்படுத்தபட்டோருக்கு வேலைவாய்ப்பு, கடன் உதவிகள் திட்டம் உள்ளது. ஆனால் நாங்கள் வலியுறுத்தியும் தமிழகத்தில் நடைபெறவில்லை. 45 ஆண்டுகளுக்கு முன்பு, ஜாதிவாரி கணகெடுப்பு தேவை. ஜாதிவாரி கணகெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. நீதிமன்றங்கள் தலையீடு இல்லை. 4 மாநிலங்களில் ஜாதி வாரி கணகெடுப்பு நடந்துள்ளது. ஆனால், தமிழகம் தயங்குவது ஏன்?. சமூகநல்லிணக்கத்திற்கு தடை போதை பொருட்கள். ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம். ஆனால் இது குறித்து மக்களுக்கு தெளிவு பிறக்கவில்லை. 2026ல் பிறந்து விடும். மது இல்லாவிட்டால் வேலை வாய்ப்பு, சமுதாய நல்லிணக்கம் பெருகும் இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், ஸ்ரீமத் கோளறிநாத ஆதீனம் 39வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மாநந்த சரஸ்வதி சுவாமிகள், மன்னார்குடி செண்டை அலங்கார செண்பகமன்னார் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சம்பத்குமார ராமானுஜ ஜீயர் சுவாமிகள்,பேரூர் ஆதினம், சோழமண்டல தம்பிரான் சுவாமிகள் தவத்திரு சிவப்பிரகாச அடிகளார், பொள்ளாச்சி தத்துவ ஞானசபை ஆச்சாரியர் ஸ்ரீமத் வேதாந்த ஆனந்தா சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், அருட்தந்தை எஸ்.லுார்துசாமி, மௌலானா மௌலவி யூ.அபூதாஹிர் ஃபைஜிபாகவி இமாம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.





















