கடைமடை பகுதிக்கு தண்ணீர்.. நடவடிக்கை வேண்டும்: இந்திய கம்யூ., பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
மேட்டூர் அணை திறந்து 15 நாட்கள் ஆகியும் பட்டுக்கோட்டை, பேராவூரணி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. கொள்ளிடம் ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது.
தஞ்சாவூர்: மேட்டூர் அணை திறந்து 15 நாட்கள் ஆகியும் பட்டுக்கோட்டை, பேராவூரணி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. இதை அரசு கவனத்தில் கொண்டு கடைமடை பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூ., கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் என். பெரியசாமி பங்கேற்று வழி காட்டினார்.
கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை
கூட்டத்தில் மேட்டூர் அணை திறந்து 15 நாட்கள் ஆகியும் பட்டுக்கோட்டை, பேராவூரணி கடைமடை பகுதிகளுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் செல்லவில்லை. கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. இதை மாநில அரசு கவனத்தில் கொண்டு கடைமடை பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயத்திற்கு தேவையான உரம் தேவையான அளவு கையிருப்பு வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான அளவு பயிர் கடன் தாமதம் இன்றி வழங்கப்பட வேண்டும். பாப்பாநாடு பகுதியில் நிகழ்ந்த பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய அரசு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும், குடும்பத்தாருக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கிட வேண்டும். தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பள்ளி மாணவர்களிடத்தில் எளிதாக விற்பனை செய்யப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதை பொருட்களை தடை செய்ய குழு அமைக்கணும்
கிராமங்கள் தோறும் ஊராட்சி தலைவர், கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் இளைஞர்களை இணைத்து போதை மற்றும் கஞ்சா தடை செய்ய குழு அமைக்கப்பட வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவருக்கு வகை மாற்றம் செய்து அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடைமடை பகுதிகளில் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும். தஞ்சாவூர் டு பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதை மழைக்காலம் தொடங்கும் முன்பாக முடித்தும், தற்பொழுது ஏற்பட்ட வரும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் தனியார் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து. உத்தரபதி, நிர்வாககுழு உறுப்பினர்கள் சக்திவேல், பக்கிரிசாமி, பாஸ்கர், மோகன், பாலசுந்தரம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கண்ணகி, விஜயலட்சுமி ,தஞ்சாவூர் மாநகரம் முத்துக்குமரன் பட்டுக்கோட்டை சுதாகர் ,ஒரத்தநாடு.வாசு. இளையராஜா. பேராவூரணி வீரமணி, திருவோணம் ராமசாமி,மதுக்கூர் முத்துராமன் பூதலூர் வடக்கு பிரபாகரன், பட்டுக்கோட்டை பூபேஷ் குப்தா, சீனி முருகையன், த. கிருஷ்ணன் ,தனசீலி , பிரபாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.