தஞ்சாவூரில் நடந்த மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவம்... ஆட்டோவிலிருந்து விழுந்து பள்ளி மாணவன் பலி
நேற்று மாலை பள்ளி முடிந்ததும், வீட்டுக்கு ஆட்டோவில் சீனிவாசன் சென்றான். ஆட்டோவில் 7 மாணவ, மாணவிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஆட்டோவிலிருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தனியார் பள்ளியில் படிக்கும் மாணவன்
தஞ்சாவூர் விளார் சாலை அண்ணாநகர் முதல்தெருவைச் சேர்ந்தவர் குமார். பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோஜா. இவர்களது மகன் சீனிவாசன் (9). தஞ்சாவூர் கல்லுகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளிக்கு தினமும் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த வினோத்(26) என்பவரின் ஆட்டோவில் செல்வது வழக்கம்.
அதே போல் நேற்று மாலை பள்ளி முடிந்ததும், வீட்டுக்கு ஆட்டோவில் சீனிவாசன் சென்றான். ஆட்டோவில் 7 மாணவ, மாணவிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆட்டோ நாஞ்சிக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சீனிவாசன் ஆட்டோவிலிருந்து தவறி வெளியே விழுந்துள்ளான்,
ஆட்டோவிலிருந்து விழுந்து படுகாயம்
இதில் தலையில் பலத்த அடிப்பட்டு ரத்தம் கொட்டி உள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சீனிவாசனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சீனிவாசனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து சீனிவாசனின் உடல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து தஞ்சாவூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநரான வினோத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது
தஞ்சாவூர் அருகே தன்னிடம் டியூசன் படித்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உமையாள்புரம் பகுதியை சேர்ந்தவர் எஸ்.முருகன் (35). தற்போது கும்பகோணம் அருகே மாதுளம்பேட்டை பகுதியில் தங்கி உள்ளார். இவர் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர். மேலும் கபிஸ்தலத்தில் டியூசன் சென்டர் வைத்து நடத்தி வருகிறார்.
ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை
இந்நிலையில் கடந்த 6ம் தேதி தன்னிடம் டியூசன் படிக்கும் 16 வயது சிறுமியிடம் ஆபாசமாக பேசி தனது பைக்கில் ஏறுமாறு கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்து, மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அந்த சிறுமி இதுகுறித்து தன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் நேற்று முன்தினம் பாபநாசம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் போலீசார் ஆசிரியர் முருகனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதில் சிறுமிக்கு ஆசிரியர் முருகன் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.





















