கும்பகோணத்தில் கனமழையால் சாலையில் விழுந்த 100 ஆண்டு பழமையான புளியமரம்
’’இரு முறை பெய்த தொடர் மழை காரணமாக ஏறத்தாழ 6,000 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ இளம் நெற் பயிர்கள் மூழ்கியும், தண்ணீர் சூழ்ந்தும் பாதிக்கப்பட்டன’’
கும்பகோணம் அருகே 100 ஆண்டுகள் பழமையான புளியமரம் சாலையின் குறுக்கே விழுந்ததால், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் மரத்தினை பார்வையிட்டு உடனடியாக அகற்ற உத்தரவிட்டதையடுத்து புளியமரம் அப்புறப்படுத்தப்பட்டது. கும்பகோணம் அருகே சாக்கோட்டை- நாச்சியார்கோவில் சாலையில் ஒத்தகுளம் என்ற இடத்தில் 100 ஆண்டுகள் பழமையான பெரிய புளியமரம் சாலையோரம் இருந்தது. தொடர் மழையின் காரணமாக, ஆபத்தான நிலையிலிருந்த புளியமரம் சாலையின் குறுக்கே திடிரென விழுந்தது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அலுவலக நேரம் என்பதால் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், மரம் விழுந்த இடத்தினை பார்வையிட்டு, உடனடியாக நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, மின்வாரியத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக மரம் விழுந்து இடத்துக்கு வரவழைத்தார். பின்னர் பணியாளர்கள் மூன்று மணி நேரம் மரத்தினை அறுத்தும், பொக்லீன் இயந்திரம் மூலம் மரத்தினை அகற்றியும் போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் அந்த சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எப்போது பொது மக்கள்,வாகன ஒட்டிகள், பஸ்கள் சென்று வரும் பிரதான சாலையான கும்பகோணம் - திருவாரூர் சாலையில், யாரும் வராதத விழுந்ததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதே போல் வட கிழக்கு பருவ மழை தொடங்கியதையடுத்த, தஞ்சாவூரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தஞ்சாவூரில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டு குழியுமாக மிகவும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கின்றது. தஞ்சாவூரை அடுத்த பள்ளியக்கிரஹாரம் சாலையில் உள்ள பாதாள சாக்கடைகள் அடைத்து கொண்டு, கழிவு நீர்கள் வெள்ளக்காடாக சாலையில் ஒடுகிறது. இதே போல் கீழராஜவீதி, மேலராஜவீதி,தெற்கு வீதி உள்ளிட்ட தஞ்சாவூர் மாநகரம் முழுவதுமுள்ள பாதாள சாக்கடையின் மேன்ஹோல்களிலிருந்து கழிவு நீர் ஆறாக ஒடுகிறது.
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் தஞ்சாவூரில் உள்ள விரிவாக்கம் செய்யப்பட்ட நகர்களில் மழை நீர் வடியாமல் பல நாட்களாக தேங்கி நிற்கின்றது. அதில் பாம்புகள் போன்ற விஷஜந்துக்கள் அதிகமாக நடமாடுவதால், குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் சென்று வருகின்றார்கள்.தஞ்சாவூர் மாவட்டத்தில் வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால், பயிர்களை நீர் சூழ்ந்து வருகிறது. மாவட்டத்தில் ஏற்கெனவே இரு முறை பெய்த தொடர் மழை காரணமாக ஏறத்தாழ 6,000 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ இளம் நெற் பயிர்கள் மூழ்கியும், தண்ணீர் சூழ்ந்தும் பாதிக்கப்பட்டன. வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிந்து வந்த நிலையில், தொடர்ந்து இடைவெளி விட்டு விட்டு பலத்த மழை பெய்கிறது.
இதனால், தஞ்சாவூர் அருகே சீராளூர், கள்ளப்பெரம்பூர், சக்கரசாமந்தம், ரெட்டிபாளையம், வெள்ளாம்பெரம்பூர், வரகூர், அன்னப்பன்பேட்டை, பணவெளி, ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, அந்தலி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான ஏக்கர்களில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கியும், தண்ணீர் சூழ்ந்தும் உள்ளன.ஆனால், வடிகால் வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகவே இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. வடிகால் வாய்க்கால்களை முழுமையாகத் தூர் வாரினால் மட்டுமே இதுபோன்று தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.இதனிடையே, பலத்த மழை பெய்து வரும் நிலையில் வயல்களில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வடிகால்களில் தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் உடனடியாகச் சீர் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில் ஏற்கெனவே பெய்த மழையால் ஏறத்தாழ 1,700 கூரை மற்றும் ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. தற்போது, தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் 62 கூரை வீடுகளும், ஓடுகள் வேயப்பட்ட 28 வீடுகளும் என மொத்தம் 90 வீடுகள் பகுதியாகச் சேதமடைந்தன.தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகேயுள்ள சிங்கபெருமாள் குளத்தில் தொடர் மழை காரணமாக தண்ணீர் நிரம்பி வழிகிறது. வடிகால் வசதி உரிய வகையில் இல்லாததால், வழிந்து சாலையில் ஓடுகிறது.திருவையாறு அருகே கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் கோயிலில் மழை நீர் வடிவதற்கு வடிகால் வசதி இல்லாததால், தற்போது பெய்து வரும் மழையால் சுமார் ஒரு அடி உயரத்துக்குத் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதை கோயில் நிர்வாகம் சார்பில் மோட்டார் வைத்து இறைக்கப்பட்டது.