தஞ்சையில் கல்லூரி மாணவரை மிரட்டி செல்போன், பைக் பறித்த 3 பேர் கைது
தஞ்சையில் கல்லூரி மாணவரை மிரட்டி செல்போன், பைக்கை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வடூவூர் பகுதியை சேர்ந்தவர் சிவகணேஷ் (23). இவர் வல்லத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். சம்பவத்தன்று தஞ்சை- நாகை சாலையில் உள்ள சாய்பாபா கோவில் அருகே சிவகணேஷ் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 4 பேர் சிவகணேசை வழி மறித்தனர். தொடர்ந்து சிவகணேசை மிரட்டி அந்த நாலு பேரில் ஒருவர் சிவகணேஷ் பைக்கில் ஏறியுள்ளார்.
மற்றவர்கள் இரண்டு பைக்கில் பின் தொடர்ந்து வந்துள்ளனர். மன்னார்குடி பிரிவு சாலை அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிவகணேசை இறக்கிவிட்டு அவரது செல்போன் மற்றும் பைக்கை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து சிவகணேஷ் தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தஞ்சை ஜோதிநகர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வெங்கி என்ற வெங்கடேசன் (24), கவுதம் நகரை சேர்ந்த பூமிநாதன் மகன் வெங்கட் என்ற வெங்கடேசன் (24), திருவாரூர் வடபாதியை சேர்ந்த அருணாச்சலம் மகன் வெங்டேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சையில் தனியார் வங்கி ஊழியர் வீட்டு கதவை உடைத்து 11 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை விளார் ரோடு அருள் நகரை சேர்ந்தவர் ஆனந்த் எட்வின் (33). தஞ்சையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டார். இவருடைய அம்மா கடைக்கு சென்று விட்டாராம்.
மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்த ஆனந்த் எட்வின், பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 11 பவுன் தங்கநகைகள் திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து ஆனந்த் எட்வின் தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார்.
தொடர்ந்து தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.