11 ஆட்டோக்களில் 29 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பயணம்: எதற்காக தெரியுங்களா?
சென்னையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு நமது கலாச்சாரங்களை அறிந்து வருகின்றனர்.

தஞ்சாவூர்: தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் வெளிநாட்டை சேர்ந்த 16 பெண்கள் உள்பட 29 சுற்றுலா பயணிகள் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இன்று தஞ்சைக்கு வந்தனர்.
சென்னையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு நமது கலாச்சாரங்களை அறிந்து வருகின்றனர். அதன்படி தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை தெரிந்து கொள்ளும் வகையில் லண்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளை சேர்ந்த 16 பெண்கள், 13 ஆண்கள் என மொத்தம் 29 சுற்றுலா பயணிகள் இந்தியாவில் 1500 கி.மீ மேல் ஆட்டோவில் பயணம் செய்கின்றனர். இந்த பயணத்தில் தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ள உள்ளனர். இதற்காக கடந்த 28-ந்தேதி சென்னைக்கு வந்தனர்.

பின்னர் அன்றைய தினம் சென்னையில் இருந்து 11 ஆட்டோக்களில் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்றனர். வெளிநாட்டினர் தாங்கள் பயணிக்கும் ஆட்டோக்களை தாங்களாகவே ஓட்டி செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொடர்ந்து புதுச்சேரியில் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். நேற்று இரவு தஞ்சையை வந்தடைந்தனர். தஞ்சையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினர்.
தொடர்ந்து இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு 29 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் 11 ஆட்டோக்களில் புறப்பட்டு பெரியகோவிலுக்கு சென்றனர். அங்கு பெரியகோயிலை சுற்றி பார்த்து வியந்தனர். தமிழர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மெய்மறந்து ரசித்தனர்.
முன்னதாக தஞ்சையில் பெரிய கோயிலுக்கு புறப்படும் முன்பு அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் மதுரைக்கு செல்லும் அவர்கள் அங்கு ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகின்றனர். தொடர்ந்து மதுரையில் பிரசித்தி பெற்ற இடங்களை பார்வையிட்டு தூத்துக்குடி, கன்னியாகுமரி வழியாக வருகிற 6-ந்தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தங்களது பயணத்தை நிறைவு செய்கின்றனர்.





















