நில அடங்கல் வாங்க வந்தது தப்பா? மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் காயம்: தஞ்சை அருகே பரபரப்பு
கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்தவர்களும் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பலத்த காயமடைந்த இருவரும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர்: பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு முக்கியம். ஆனால் தஞ்சை மாவட்டம் நெய்வாசலில் கிராம நிர்வாக அலுவலர் கட்டட மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் நெய்வாசல் கிராம நிர்வாக அலுவலர் கட்டடம் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் நெய்வாசல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று ஒரத்தநாடு நெய்வாசல் பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் (65) மற்றும் பாண்டியன் (50) இருவரும் தங்களுக்கு சொந்தமான நிலத்திற்கு அடங்கல் வாங்க வந்தனர். இவர்கள் இருவரும் அலுவலகத்திற்குள் தங்கள் பணிக்காக அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து பாலசுந்தரம், பாண்டியன் மீது விழுந்தது.
இதில் பாலசுந்தரத்திற்கு தலையிலும் பாண்டியனுக்கு தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டது. திடீரென்று ஏற்பட்ட இந்த அதிர்ச்சி சம்பவம் இருவரையும் நிலை குலைய வைத்து விட்டது. மேலும் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்தவர்களும் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பலத்த காயமடைந்த இருவரும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பழுதடைந்த இந்த அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று இரவு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்டம் முழுவதும் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலளர் சங்கர் தலைமை வகித்தார். இதில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு, பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். வாடகை கட்டிடத்தில் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு சொந்த கடடிடம் கட்டிடத்தர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

கிராம நிர்வாக அலுவலகத்தின் முக்கியப் பணிகளில் நிலப் பதிவேடுகள் பராமரித்தல், நில வரி மற்றும் பிற வரிகளை வசூலித்தல், சாதிச் சான்று, வருமானச் சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்களை வழங்குவதற்கான அறிக்கைகளை அரசுக்கு அனுப்புதல் ஆகியவை அடங்கும். மேலும், வாக்காளர் பட்டியலைப் பராமரித்தல், தேர்தல் பணிகளுக்கு உதவுதல், புள்ளிவிவரங்கள் சேகரித்தல், சட்டம் ஒழுங்கைப் பேணுதல் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்குத் தேவையான விவரங்களை வழங்குதல் போன்ற பணிகளையும் கிராம நிர்வாக அலுவலர் செய்கிறார்.
கிராம நில அளவீடுகள் மற்றும் நிலப் பதிவேடுகளைப் பராமரித்தல், பட்டா மாற்றம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளுதல், மாதாந்திர பயிராய்வுப் பணிகளை மேற்கொள்ளுதல். நிலவரி, வீட்டு வரி, பண்ணை வரி, மற்றும் அரசுக்குச் சேர வேண்டிய பிற தொகைகளை வசூலித்தல். சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்புச் சான்று போன்ற சான்றிதழ்களை வழங்குவது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்புதல். மக்கள் தொகை கணக்கெடுப்பு, கால்நடை கணக்கெடுப்பு மற்றும் பாசன ஆதார கணக்கெடுப்பு போன்ற பணிகளைச் செய்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றுக்காக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கிராம நிர்வாக அலுவலகம் வந்து செல்கின்றனர்.
பணியில் இருப்பவர்களுக்கும், தங்கள் பணிக்காக வரும் மக்களுக்கும் பாதுகாப்பு தேவை. எனவே பழுதான கட்டிடங்களில் இயங்கும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.





















