திருவையாறு அருகே ஆதித்த கரிகாலன் கட்டிய வேதபுரீசுவரர் கோயிலுக்கு சொந்தமான 2.75 ஏக்கர் நிலங்கள் மீட்பு
சொந்தமான நஞ்சை நிலம் சுமார் 2 ஏக்கர் 57 செண்ட் குத்தகை தாரர்கள் குத்தகை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதனால் கோவில் நிர்வாகம் தஞ்சை வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த திருவேதிகுடியிலுள்ள வேதபுரீசுவரர் கோயில், சம்பந்தர், அப்பர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 14வது சிவத்தலமாக இந்த கோயில் விளங்குகிறது. வேதமும்- பிரமனும் பூசித்த தலமாதலின் வேதிகுடி என்று பெயர் பெற்றது. வேதம் வழிபட்டதாகவும் கூறுவர். (விழுதிகுடி' என்பது மருவி வேதிகுடியானது). சுவாமி வாழைமடுவில் உற்பத்தியானதால் 'வாழைமடு நாதர் ' என்றும் அழைக்கப்படுகிறார். முதலாம் ஆதித்த சோழன் காலக்கோயிலான இக்கோயிலின் கல்வெட்டில், சுவாமி வேதிகுடி மகாதேவர் என்றும் பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர் என்றும் குறிக்கப்படுகிறார்.
திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவயாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சப்தஸ்தானத்தின் போது திருவேதிகுடியிலிருந்து வேதியர்கள் செல்வதாகவும் கூறப்படுகிறது. சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும் அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார்.
இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப்போடும் கழ்ச்சி நடைபெறும் இத்தகைய சிறப்பு பெற்ற திருவேதி குடியிலுள்ள வேதபுரீஸ்வரர் இக்கோயில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமாக உள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான நஞ்சை நிலம் சுமார் 2 ஏக்கர் 57 செண்ட் குத்தகை தாரர்கள் குத்தகை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதனால் கோவில் நிர்வாகம் தஞ்சை வருவாய் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் குத்தகைதாரர்கள் கோவிலுக்கு எந்த தொகையும் செலுத்தாத காரணத்தினால் வருவாய் நீதிமன்றம் கோவில் நிலத்தை குத்தகை தாரர்களிடமிருந்து மீட்டு கோவிலிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
அந்த தீர்ப்பின்படி, இந்து அறநிலைத்துறை தஞ்சை உதவி கமிஷனர் சிவராம்குமார், தஞ்சை ஆய்வாளர் கீதாபாய், திருவையாறு ஆய்வாளர் குணசுந்தரி, செயல் அலுவலர் பிருந்தாதேவி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் முன்னிலையில், 2 ஏக்கர் 57 செண்ட் நிலத்தை கையகப்படுத்தி, கோவில் வசம் ஒப்படைத்தனர்.