சீர்காழி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு மாநில அரசு பேருந்துகள் - 18 பேர் படுகாயம்
சீர்காழி அருகே இரு மாநில அரசு பேருந்துகள் மோதிக்கொண்டது. 18 பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புறவழிச்சாலையில் கோவில்பத்து என்ற இடத்தில் இது மாநில பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் படுகாயம் அடைந்தனர். சீர்காழி புறவழிச்சாலை பொறையாரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தமிழ்நாடு அரசு கும்பகோணம் போக்குவரத்து கழக பேருந்தும், சிதம்பரத்தில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற புதுச்சேரி மாநில அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்டது.
இதில் இரண்டு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பயணிகள் என 18 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸில், பேருந்தில் காயம் அடைந்தவர்களை அப்பகுதி பொதுமக்கள் பத்திரமாக மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், நாகை - விழுப்புரம் நான்கு வழி சாலை பணி நடைபெற்ற நிலையில் அதற்காக பாலம் கட்டப்பட்டு வரும் சூழலில் அந்த சாலை குறுகலாக இருந்து வருகிறது. அந்த இடத்தில் இரண்டு பேருந்துகளும் ஒரே நேரத்தில் செல்ல முற்பட்டதா விபத்து ஏற்பட்டதாக விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து குறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுவாக புதுச்சேரி மாநில அரசு பேருந்தான பிஆர்டிசி பேருந்து எப்போதும் அதிவேகமாகவே இப்பகுதியில் சென்று வருகிறது. இந்த விபத்திற்கும் வேகமாக வந்த புதுச்சேரி மாநில பேருந்துதான் காரணம் என தெரிவித்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சையில் உள்ளவர்களின் விபத்து குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். இவ்விபத்து தொடர்பாக சீர்காழி காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் சீர்காழி நகருக்குள் வரவேண்டிய அரசு பேருந்துகள் பல சீர்காழிக்குள் வந்து செல்லாமல், சீர்காழி புறவழிச் சாலை வழியாக மயிலாடுதுறை, கும்பகோணம், காரைக்கால் நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்கின்றது.
இந்த பேருந்துகளில் வரும் சீர்காழி பயணிகள் சீர்காழி நகருக்கு வெளியே கிலோமீட்டர் தொலைவில் வழிச்சாலையில் நடுவழியில் இறக்கிவிட்டு செல்கின்றனர். இது தொடர்பாக பலமுறை அரசு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாதே இதுபோன்று புறவழிச் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் விபத்துக்கு முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்