கும்பகோணம் அருகே விவசாயி அடித்து கொல்லப்பட்ட வழக்கு; 10 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ராஜேந்திர சோழகம் கிராமம் மேலத்தெரு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் கல்யாண குமார் (49). நாகமங்கலம் மூலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (40). விவசாயி. இவர்கள் இருவரும் உறவினர்கள். இதில் கல்யாணகுமார் நெல் அறுவடை இயந்திரம் வைத்து வாடகைக்கு விட்டு வந்தார். இந்த பணியை காளிமுத்து மேற்பார்வையிட்டு வந்தார்.
அறுவடை இயந்திரத்தின் டிரைவராக சேலம் மாவட்டம் கங்கைவெளி நடுவூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் குமார் என்பவர் இருந்து வந்தார். இந்நிலையில் கல்யாணகுமார் நெல் அறுவடை பருவத்தில் திருநீலக்குடி அருகே விட்டலூர் கிராமத்துக்கு இயந்திரத்தை எடுத்து வந்து அங்குள்ள விவசாயிகளுக்கு வாடகைக்கு விடுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2020 -ம் ஆண்டு பிப்ரவரி 11ம்தேதி வழக்கம்போல் கல்யாண் குமார் விட்டலூர் கிராமத்தில் தனது அறுவடை இயந்திரத்தை கொண்டு வந்தார். அவருடன் காளிமுத்து, இயந்திரத்தின் டிரைவர் குமார் ஆகியோரும் வந்து விவசாயிகளின் வயல்களில் அறுவடை பணிகளை செய்து வந்தனர்.
இதில் பார்த்திபன் என்பவர் அஞ்சம்மாள் என்பவரது வயலில் விளைந்துள்ள நெல்லை அறுவடை செய்ய வேண்டும் எனக் கூறி கதிர் அறுக்கும் இயந்திரத்தை வாடகைக்கு கேட்டுள்ளார். தொடர்ந்து கல்யாண்குமாரும், பார்த்திபன் கூறிய வயலில் அறுவடை பணிகளை செய்து வந்தார். அப்போது அங்கு வந்த விட்டலூர் மேல தெரு பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன்கள் மனோகரன் (51), அவரது மகன் கார்த்தி (27) மற்றும் இவர்களின் ஆதரவாளர்கள் நாகராஜன் மகன்கள் மணிவண்ணன் (44), இளங்கோவன் (42), கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த குஞ்சு மகன் குணசேகரன்(54) அன்பழகன் மகன் தியாகராஜன் (31) வடக்கு மூலங்குடி நடேசன் மகன் ரவிச்சந்திரன்(50), தெற்கு மூலங்குடி சின்னத்தம்பி மகன் ராமதாஸ் (58), விட்டலூர் கீழத்தெரு நாகராஜன் மகன் அன்பழகன் (50), மேல தெரு ராதாகிருஷ்ணன் மகன் சிலம்பரசன்(35) ஆகியோர் அறுவடை பணிகளில் ஈடுபட்டிருந்த கல்யாணகுமார், காளிமுத்து, டிரைவர் குமார் ஆகியோரிடம் வயலின் உரிமையாளர்களுக்கும் தங்களுக்கும் பிரச்சனை இருப்பதால் உடன் அறுவடை பணிகளை நிறுத்த சொல்லி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த காளிமுத்துவை மனோகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கினர். இதை தடுக்க வந்த டிரைவர் குமார் மற்றும் கல்யாணகுமார் ஆகியோரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்து கிடந்த காளிமுத்துவை கல்யாண குமார் மற்றும் டிரைவர் குமார் ஆகியோர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புகாரின் பேரில் திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரன் உள்ளிட்ட 10 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிகள் 10 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் தலா ரூ.5,500 அபராதம் விதித்தார்.