அரசு ஊழியர்கள், அலுவலர்கள் 2 வாரத்திற்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் - முதல்வர் வலியுறுத்தல்..
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், அரசு அலுவலர்கள் இரண்டு வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், நேற்று முன்தினம் முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு தொடர்பாக, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை, உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின்போது தமிழகத்தில் கொரோனா நிலவரம், கொரோனா பாதிப்பு அதிகரிப்பிற்கான காரணம், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசித்தனர்.
இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேசியதாவது, “கொரோனா பரவலைத் தடுக்க போதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளது. முகக்கவசங்கள், ஊசிகளும் கையிருப்பில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிகளவில் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகளை தமிழக அரசு செய்து வருகிறது.
காய்ச்சல் முகாம்கள் மூலம் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது 200 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவற்றை 400-ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது வரை 261 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் 8 லட்சம் முகாம்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 15 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். கபசுரக் குடிநீர் கூடுதலாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் 8.41 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு அலுவலர்கள், அரசு ஊழியர்கள் இரண்டு வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.
இந்த ஆலோசனையின் போது, தமிழகத்திலும் மகாராஷ்ட்ரா போல இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிப்பது குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்தினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.