Sattai Durai Murugan Speech: என்ன பேசினார் ‛சாட்டை’துரை முருகன்...? கைதுக்கு காரணம் இது தான்!
பிரபாகரன் பிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்று காங்கிரஸ்காரர்களுக்கு தெரியும். ராகுல்காந்திக்கு தெரியும். சோனியாகாந்திக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? ஸ்ரீபெரும்புதூர் நியாபகம் இருக்கா? அவ்வளவுதான்.
குமரி மலைகளை உடைத்து கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து கன்னியாகுமரியின் தக்கலையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட யூடியூபர் சாட்டை முருகன், தலைவர்கள் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. கேரள முதலமைச்சருடன், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை ஒப்பிட்டு சர்சையாகவும் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சாட்டை துரைமுருகன் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாட்டை துரைமுருகன் பேசியது என்ன?
“கன்னியாகுமரியில் ஏதோ ஒரு முக்கில், மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரேஒரு பாகத்தை ஒரு 18 குவாரியை வைத்து அறுப்பதற்காக நாம் தமிழர் கட்சி எதற்காக இந்த கூட்டத்தை கூட்டியுள்ளது. 1800 கிலோ மீட்டர் இருக்கிற மேற்கு தொடர்ச்சி மலையில் கேக்கை போல ஒரு சின்ன பீஸ் அறுப்பதற்காக இந்த போராட்டாமா என்று கேட்கலாம். அந்த மலையில் பல உயிரினங்கள் வாழ்கிறது. அதற்காகதான் இந்த போராட்டம். மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு பாகத்தை அறுப்பதால், இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாயம், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும். ஆனால், இங்குள்ள கரைவேட்டி கட்டியவர்களுக்கு அதுதெரியவில்லை . தென்மேற்கு பருவக்காற்றுதான் இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாயத்தையும் தீர்மானிக்கிறது. தார்பாலைவனத்தில் ஏற்படுகின்ற ஒரு வகையான சூட்டை வெப்ப காற்றை தணிப்பதற்கு இயற்கையே உருவாக்கிய காற்றுதான் தென்மேற்குபருவக்காற்று. மே மாதத்தில் தார் பாலைவனத்தில் வெப்ப காற்று உருவாகும். அந்த வெப்பக்காற்றை தடுப்பதற்கு இயற்கையே தென்மேற்குபருவக்காற்றை அனுப்பி, அந்த சூட்டை தடுத்து இமயமலை தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் மழையை பொழிந்து செல்வச் செழிப்பாக மாற்றுவது இந்த மேற்கு தொடர்ச்சி மலை. இந்த மலையில் ஒரு பாகத்தை அறுத்தால், ஒட்டுமொத்த அது தொல்லையை ஏற்படுத்தும்.
இந்த ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என்று கூறுவோருக்கு மலை என்றால் என்ன என்பது தெரியுமா?. ஐயா வாலி கூறுகிறார், “மலை என்பது மண் அன்னையின் மார்பகங்கள். ஓ இவ்வளவு பெரியதா என்று அதிசயம் கொள்ளாதீர்கள். எத்தனை மேகக்கூட்டங்கள், எத்தனை மேகக் குழந்தைகள் அத்தனைக்கும் பால் ஊட்ட வேண்டாமா?” என்று மலைகளை பற்றி வாலி பாடுகிறார். அந்த அடிப்படை அறிவு, மலை என்றால் என்ன?, மரம் என்றால் என்ன?, செடி, கொடிகள் என்றால் என்ன?. எதனால், மலையை வெட்டக்கூடாது என்று கூறுகிறோம் என்று எந்தவிதமான புரிதலும் இல்லாமல், சீமான் கனிமவளத்துக்கு எதிராக பேசுகிறார். அது கேரளாவுக்கு கடத்தக்கூடாது என்று பேசுகிறார். கேரளா மலையாளிகள் தேசம் என்பதற்காக நாங்கள் கடத்தக்கூடாது என்று சொல்லவில்லை. கேரளாவில் கட்டுகிற துறைமுகத்துக்கு எதற்காக தமிழ்நாட்டில் இருந்து வளங்களை கொள்ளையடித்து போகிறீர்கள். கேரளாவிலும் மலைகள் இருக்கிறது. (தரக்குறைவான வார்த்தைகள் உபயோகிக்கிறார்) அங்கு நல்ல முதலமைச்சர் இருக்கிறார். இங்கு இல்லை அதான் பிரச்னை. சீமான் கனிமவளத்துக்கு ஆதரவாக பேசுகிறார் என்று ஒரு அமைச்சர் கூறுகிறார். அவர் என் மீது வழக்கு போடுவேன் என்று கூறுகிறார். தயவு செய்து போடுங்கள்.
ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி 8 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஒன்றியச் செயலாளர் ஜான் பிரைடு உள்ளிட்ட 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதை எதிர்த்து பேசினால், வழக்கு போடுவோன் என்று சொன்னால், அந்த வழக்கு அதற்கு (கெட்டவார்த்தை) சமம். சிறை, அத்துமீறல், அநீதி எல்லாவற்றையும் எதிர்த்து குரல் கொடுக்கதான் அண்ணன் சீமான் எங்களை உருவாக்கியிருக்கிறார். நாங்கள் வீட்டுக்காக வளருவதைவிட, நாட்டுக்காக சாகதான் பெருமைபடுகிறோம். இந்த மலைக்காகதான் போராட்டம். இந்த மலையை பற்றி நான் பேசாமல் யார் பேசுவார்கள். சீமான் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை பற்றி பேசிவிட்டார். அவர் விவசாயிகளுக்கு எதிரானவர், தொழிலாளிகளுக்கு எதிரானவர். தாமிரபரணி ஆற்றில் மாஞ்சோலை தொழிலாளர்களை கொன்ற திமுக, தொழிலாளர்கள், விவசாயிகளை பற்றி பேசலாமா?. கருணாநிதி அப்பா உடையதோ, ஸ்டாலின் அப்பாவின் வீட்டு காசை கேக்கவில்லை. மும்பை சேட்டின் உடைய காசை, அதாவது கூலி உயர்வை கேட்டதற்கு 17 தேவேந்திர குல சொந்தங்களை சுட்டுவீழ்த்தியவர்கள் இந்த திமுக. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது. விமர்சனம் செய்யக்கூடாது என்றால் நீங்கள் எல்லாம் தேவதூதர்களா?, ஏசு பிரானா, கண்ணாபிரானா, நபிகள் நாயகமா கேட்போம். கனிமவள கொள்ளைகளை தடுக்க வேண்டியது திமுக. நீங்கள் தடுக்கவில்லை என்றால், நாங்கள் கேட்போம்.
நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு பெண்ணுக்கும் 1000 ரூபாய் ஊக்கத்தொகை கொடுப்பீர்கள் என்று கூறினீர்கள். அதை ஏன் கொடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்யப்படும் என்று கூறினீர்கள், நீட் தேர்வால் மூன்று மாணவர்கள் இறந்துள்ளனர், நீட் தேர்வை ஏன் ரத்து செய்யவில்லை என்று கேட்போம். அதற்காக வழக்கு போடுவோன் என்றால் போட்டுக்கொள்ளுங்கள். இதுதொடர்பாக பேசினால், பல மிரட்டல் கால்கள் வருகிறது. என் அண்ணன் என்னை கட்டுப்படுத்தி வைத்துள்ளார். பழைய படி நான் பேசினால் நீங்கள் எல்லாம் தாங்கமாட்டீர்கள். நான் எல்லாம் கேவலமான காட்டு கிராமத்தில் பிறந்து வந்திருக்கிறேன். எல்லாம் (கெட்டவார்த்தை) அதற்கு சமம். நீங்கள் கருணாநிதி, அண்ணாதுரையை படித்து வந்தவர்கள், நாங்கள் தலைவர் பிரபாகரனை படித்து வந்தவர்கள். பெரியார், அண்ணா பிள்ளைகளுக்கு பேசத்தெரியும், எழுத தெரியும். பிரபாகரன் பிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்று, காங்கிரஸ்காரர்களுக்கு தெரியும். ராகுல்காந்திக்கு தெரியும். சோனியாகாந்திக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா?. ஸ்ரீபெரும்புதூர் நியாபகம் இருக்கா? அவ்வளவுதான்.
சீமான் வந்தா வெட்டிவிடுவீர்களா?, நீங்கள் வெட்டவேண்டும் என்றால், ஒரு லட்சம் சீமானை தாண்டிதான் கட்டவிரலை தொடமுடியும். இந்த கனிமவளத்துக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் ஆர்பாட்டமும், போராட்டமும் செய்வோம். ஒரு லாரியை கூட இங்கிருந்து செல்லவிடாமல் தடுப்போம் முடிந்தால் தடுத்துப்பாருங்கள். எங்கள் மலை இது, எங்கள் பாட்டனும், முப்பாட்டனும் வாழ்ந்த மலை இது. இந்த குறிஞ்சி மலையில்தான் எங்கள் முப்பாட்டன் முருகன் வேட்டையாடி சாப்பிட்டான். இந்த மலையில்தான் மாயோன் ஆடு, மாடு மேய்த்தான். இந்தக்காட்டில் எங்கள் இந்திரன், வேந்தன் வாழ்ந்தான். எங்கள் முருகனும், வள்ளியும் காதலோடு கொஞ்சி விளையாடிய மலை, இந்த மலை, இது எங்கள் சொந்த மலை, நாங்கள் தடுப்போம். மலை மேல் இனிமே கை வைத்தால் பயம் வரவேண்டும். ஒவ்வொரு கல்லை வெட்டும்போது, சீமானின் முகம் வந்து நிற்கும், இந்தக் கூட்டம் வந்து நிற்கும். தமிழ்நாடு முழுவதும் கொண்டுபோய் சேர்ப்போம். நீங்கள் வழக்கு போடுங்கள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படமாட்டோம். தமிழ்நாடு முழுவதும் இனி கனிமவள கொள்ளை நடந்தால் அங்கு ஒரு புலி கொடி போய் நிற்கும். கமிஷனுக்காக அல்ல கண்டகால் நரம்ப அறுக்க நிற்கும். எவ்வளவு திமிரு, அகம்பாவம், உங்கள் ஆட்சி நடந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?. சீமானிடம் கோடிகோடியாய் பணம் இருக்கும் சொல்கிறீர்கள். தைரியமிருந்தால் ஒரு ஐடி ரெய்டு விடுங்கள். விடுதலை புலிகளை மீண்டும் கட்டமைக்க பார்க்கிறார் சீமான் என்று யார் சொன்னது?. கட்டமைத்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. 2009 ஆம் ஆண்டே கட்டமைக்கப்பட்டுவிட்டது. ஈழத்திலேயே முள்ளிவாய்க்காளிலே விழுந்த புலிக்கொடி, என்றைக்கு மதுரை மண்ணில் இருந்ததோ, அன்றைக்கே விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு, நாம் தமிழர் கட்சி தொடங்கி விட்டது. விடுதலைபுலிகள், மக்கள் வேறு அல்ல, மக்கள்தான் புலிகள், புலிகள்தான் மக்கள். நாங்கள் சோழ பேரரசின் வாரிசுகள் புலிகள். இனி திராவிடம், திராவிடம் என்று கேட்கக்கூடாது. ஏன் என்றால் அது அவர்களுக்கு தெரியாது. நாம் தமிழ்தேசியம் என்றால் என்னவென்று சொல்வோம். இனி திமுக உடைய கொள்கையை கேட்க தேவையில்லை. நம்ம கொள்கைகளை கொண்டு போய் சேர்ப்போம். ஸ்டாலின் என்ன செய்வாரு, கருணாநிதி என்ன செய்தார் என்று சொல்ல வேண்டாம். சீமான் என்ன செய்யப்போறார் என்று அப்படி சொல்வோம். மக்களிடம் செல்வோம். மக்களுடன் நிற்போம். மக்கள் நமக்காக நிற்பார்கள்” என்று பேசினார்.