Madhuvanthi House Sealed Video: வீட்ட பூட்டாதீங்க Please... அதிகாரிகளிடம் கெஞ்சிய மதுவந்தி... வைரலாகும் வீடியோ!
உங்க காலில் வேண்டுமானாலும் விழறேன், எனக்கு ரொம்ப அசிங்கமா போய்டும், லாக் எல்லாம் போட்றாதீங்க... மாசக் கடைசிக்குள் தந்துடறேன். கொடுக்கலன்னா என்ன ஜெயில்ல தள்ளுங்க சர் என்கிறார் மதுவந்தி
தனது வீட்டுக்கு சீல் வைக்க வேண்டாம், மாதக் கடைசிக்குள் பணத்தை தந்து விடுகிறேன் என பாஜகவை சேர்ந்த மதுவந்தி நிதி நிறுவன அதிகாரிகளிடம் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாஜகவின் செயற்குழு உறுப்பினரான மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2 வது குறுக்கு தெருவில் உள்ள ஆசியானா அப்பார்ட்மெண்டிலுள்ள சொந்த வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்த வீடு வாங்குவதற்காக கடந்த 2016 ம் ஆண்டு இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். வீட்டை வாங்கிய பிறகு சில தவணைகள் மட்டும் வட்டி கட்டி அதன் பின்னர் தவணை பணம் கட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஃபைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாக வட்டிப்பணம் கட்ட சொல்லியும் மதுவந்தி பணம் கட்டாமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வங்கி அதிகாரிகள் வட்டிப்பணத்துடன் அசலையும் சேர்த்து ரூ 1,21,30,867 பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் உரிய பதில் சொல்லாமல் மதுவந்தி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனம் மெட்ரோ பாலிட்டன் - அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் கமிஷனர் வினோத் குமார் முன்னிலையில் மதுவந்தியின் வீடு போலீசார் பாதுகாப்போடு சீல் வைக்கப்பட்டு வீட்டுச் சாவி இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மதுவந்தியிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, "தனது வீட்டை அதிகாரிகள் சீல் வைக்கவில்லை என்றும் இது தவறான தகவல் என்றும் மேலும் இது குறித்து பேச விரும்பவில்லை" எனவும் வழக்கம் போல விசித்திரமாக பேசியிருக்கிறார்.
இந்நிலையில் அவர் அதிகாரிகளிடம் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உங்க காலில் வேண்டுமானாலும் விழறேன், எனக்கு ரொம்ப அசிங்கமா போய்டும், லாக் எல்லாம் போட்றாதீங்க... மாசக் கடைசிக்குள் தந்துடறேன். கொடுக்கலன்னா என்ன ஜெயில்ல தள்ளுங்க சார் என்கிறார்.. உடனே அதிகாரியும், எத்தன மாசக் கடைசி மேடம் என எதிர்க்கேள்வியெழுப்புகிறார்.
ஆனாலும் பலமுறை வாய்ப்புகள் கொடுத்துவிட்டதாக அதிகாரி தெரிவிக்கிறார். இதையடுத்து அதிகாரியிடம் மதுவந்தி கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.