Yercaud Flower Show: மே 22 ஆம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி!
47 வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்காட்சி மே 22ஆம் தேதி தொடங்கி, 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.
ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இந்த ஆண்டு மே 22 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 47 வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சியினை 22.05.2024, புதன்கிழமை ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சியினை தொடங்க உள்ளது.
குறிப்பாக, இக்கோடை விழாவில் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் என அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் ஏற்காடு அண்ணா பூங்காவில் 5 இலட்சம் அரிய வகை வண்ண மலர்களைக் கொண்டு மலர் சிற்பங்கள் வடிவமைக்கப்படவுள்ளது. மேலும், பார்வையாளர்களின் கண்களை கவரும் வகையில் டாலியா, மேரி கோல்ட், ஜீனியா, டோரினியம், சால்வியா உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் வண்ண மலர்களை கொண்ட 10 ஆயிரம் மலர் தொட்டிகள் இம்மலர்க்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.
மேலும், மலர் கண்காட்சியில் மலைப்பகுதிகளில் விளையக்கூடிய பல்வேறு பழங்களைக் கொண்டு பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப்படும். மலர்க்கட்காட்சி நடைபெறும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலை ஏற்றம் (டிரக்கிங்), கைப்பந்து போட்டிகள், கயிறு இழுத்தல் போட்டிகள், மராத்தான், சைக்கிளிங், சிலம்பம், படகு போட்டி, கிரிக்கெட் போட்டிகள். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள் கண்காட்சி மற்றும் சுற்றுலாத்துறை, கலைப்பண்பாட்டுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நாள்தோறும் பல்வேறு இன்னிசை, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
இந்த ஆண்டு ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த ஆண்டு எட்டு நாட்கள் நடைபெற்ற கோடை விழா இந்த ஆண்டு ஐந்து நாட்கள் மட்டுமே நடைபெறுவதால் ஏற்காட்டில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், கோடை விழாவை காண்பதற்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்களில் இருந்தும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்காடு கோடை விழா நடைபெற உள்ளதால் சேலம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.