Agarwal Hospital : அதிகரித்து வரும் கண் அழுத்த நோய் (கிளாக்கோமா) அகர்வால் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனிதச்சங்கிலி..!
கண் அழுத்த நோய் (கிளாக்கோமா) மற்றும் அதற்கான சிகிச்சை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் மனிதச்சங்கிலி மற்றும் வாக்கத்தான் (Walkathon) நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிகரித்து வரும் கண் அழுத்த நோய் (கிளாக்கோமா) மற்றும் அதற்கான சிகிச்சை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் சென்னையில் மனிதச்சங்கிலி மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
கண்ணில் அதிகரிக்கும் அழுத்தத்தின் காரணமாக பார்வைத்திறன் படிப்படியாக குறைந்து பார்வையிழக்கும் அபாயம் கொண்ட கிளாக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்க்கு தொடக்க நிலையிலேயே உரிய சிகிச்சையை பெற வேண்டியது அவசியமாகும். இதனை மக்களிடையே உணர்த்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் உலக கண் அழுத்த நோய் வாரம் மார்ச் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு பிரபல கண் மருத்துவனைகளில் ஒன்றான டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னிறுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 150-க்கும் அதிகமான நபர்கள் பங்கேற்ற மனிதச்சங்கிலி மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிற்கு தென் சென்னையின் போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் ஹிட்லர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இதுதொடர்பாக பேசிய டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறையின் பிராந்திய தலைவர் டாக்டர். ஸ்ரீனிவாச ராவ், மீண்டும் சரிசெய்ய முடியாத பார்வைத் திறனிழப்பை கண் அழுத்த நோய் (கிளாக்கோமா) ஏராளமானோருக்கு ஏற்படுவதாக தெரிவித்தார்.
மேலும், உலகளவில் இந்நோய்க்கான தலைநகரமாக இந்தியா திகழ்வதாகவும், இந்தியாவில் கண் அழுத்த நோயால் 12 மில்லியன் நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் அவர் கூறினார். அவர்களில் 1.2 மில்லியன் நபர்கள் பார்வையற்றவர்களாக வாழ்ந்து வருவதாக அதிர்ச்சி தகவலையும் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்தார். பொதுமக்களில் 98.5% பேர் இந்நோய் பாதிப்பு தங்களுக்கு இருப்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர். ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளையும் கண் அழுத்த நோய் வெளிப்படுத்தாது. நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தால் உகந்த சிகிச்சை பெறுவதே சிறந்த வழியாகும்.
எந்த வயதிலும் கண் அழுத்த நோய் ஒருவரை பாதிக்கக்கூடும். எனினும் 40 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், மரபு ரீதியாக கண் பாதிப்பை கொண்டிருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் ஒளிவிலகல் குறைபாடுகள் உள்ளவர்கள், கண் சொட்டு மருந்து, மாத்திரைகள், இன்ஹேலர்கள் மற்றும் சரும க்ரீம்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் டாக்டர். கே. சுகிபிரியா கூறினார்.