(Source: ECI/ABP News/ABP Majha)
விநாயகர் ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்றால் சாவதை தவிர வேறு வழி இல்லை- வடமாநில தொழிலாளர்கள்
’’மாவட்ட நிர்வாகம் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதியளிக்க வேண்டும். விநாயகர் சிலைகள் விற்பனை ஆகவில்லை என்றால், சாவதை தவிர வேறு வழியில்லை என்றார்’’
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு அனைத்து நகர கிராமங்களிலும் விநாயகரை சிலை ஊர்வலமாக எடுத்து கொண்டு ஆற்றில் கரைப்பது வழக்கம். இந்நிலையில் கும்பகோணம்- திருநாகேஸ்வரம் பைபாஸ் சாலையில், ரசாயன கலவை இல்லாமல், இயற்கையான பொருட்களை கொண்டு சுற்று சூழல் பாதிக்காத வண்ணம் வடமாநிலத்தவர்களால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் பிளாஸ்ட்ரோ பாரீஸ் மற்றும் ஆயில் பெயின்டினால், விநாயகர் சிலைகள் செய்ப்பட்டு வந்தது. இதனால் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கும் போது, ஆற்றில் மாசுகள் ஏற்படுவதாலும், அதில் உள்ள மீன் மற்றும் உயிரினங்கள் இறந்து விடுவதாக புகார் வந்ததையடுத்து, தமிழக அரசு விநாயகர் சிலை ரசாயன பொருட்களினால் தடை விதித்து, முற்றிலும் இயற்கை பொருட்களை கொண்டு தயார் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவையடுத்து சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வண்ணம் மாசு ஏற்படுத்தாத பொருட்களை கொண்டு பல இடங்களில் விநாயகர் சிலை இயற்கை முறையில் செய்து வருகின்றனர்.விநாயகர் முற்றிலும் இயற்கையான பொருட்களை கொண்டு தயார் செய்ய வேண்டும் என்பதற்காக பேப்பர் கூழ், பேப்பர் அட்டை, மூங்கில் குச்சி, கருவமரக்கோந்து, சாக்பீஸ் பவுடர் உள்ளிட்டவைகளை கொண்டு சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சிலைகளை அழகுப்படுத்துவதற்காக ஆயில் பெயின்டிற்கு பதிலாக , வாட்டர் கலரை கொண்டு வண்ணங்கள் தீட்டப்பட்டு வருகிறது. இதனால், ஆற்றில் கரைந்தாலும் வாட்டர் கலர் தண்ணீருடன் கரைந்து விடும்.
மேலும் மூஞ்சுறு விநாயகர், ஆஞ்சநேய விநாயகர் , ரிஷிப விநாயகர், பஞ்சமுக விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த விநாயகர் சிலைகளை சுமார் 5 அடி முதல் 15 அடி வரையிலும் செய்யப்பட்டு வரும் நிலையில் சுமார் .2 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இயற்கை முறையில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலை, ஆற்றில் தண்ணீர் போட்டவுடன் சில மணி நேரங்களில் முற்றிலும் கரைந்து விடும். பேப்பர் கூழ் மற்றும் பேப்பர் அட்டை இருப்பதால், மீன்கள் மற்றும் அதில் உள்ள உயிரினங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என இதை செய்பவர்கள் கூறுகின்றனர்
ஆனால் கொரோனா தொற்று பாதிப்பால், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்தால், பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும் என சிலை செய்யும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சிலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில்,
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 20 குடும்பத்தினர் கடந்த 18 ஆண்டுகளாக ஒரு அடி முதல் 15 அடி வரையிலான விநாயகர் சிலைகளை பல்வேறு வடிவங்களில் வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றோம். இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலத்திற்கம், நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தடை விதிக்கப்பட்டது.
இதனால் விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்தது. இதில் அவர்களுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு அடுத்த மாதம் செப்டம்பர் 10ஆம் தேதி வரும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக பொது இடங்களில் பிரதிஷ்டை செய்வதற்காக ஒரு அடி முதல் 15 அடி வரையிலான பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை கண்ணைக் கவரும் வகையிலான வண்ணங்கள் தீட்டி சிலைகளை உருவாக்கி வருகின்றோம்.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆர்டரின் பெயரில் 2000 விநாயகர் சிலைகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடபடாத நிலையில் இந்த ஆண்டும் அதே நிலைமை நீடிப்பதால், இதுவரை வெறும் மூன்று விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே ஆர்டர் வந்துள்ளதாகவும், எப்படியும் விழா நடைபெறும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கி 100 விநாயகர் சிலைகளை தயார் செய்து வைத்துள்ளோம்.
எனவே, மாவட்ட நிர்வாகம் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிலைகளை பிரதிஷ்ட்டை செய்யும், ஊர்வலத்திற்கும் அனுமதியளிக்க வேண்டும். விநாயகர் சிலைகள் விற்பனை ஆகவில்லை என்றால், சாவதை தவிர வேறு வழியில்லை என்றார்.