PTR to Annamalai: தகுதியில்லாதவரின் தவறான கேள்விக்கு பதிலளிக்க முடியாது - அண்ணாமலைக்கு பிடிஆர் பதிலடி
தகுதியில்லாதவரின் தவறான கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தகுதியில்லாதவரின் தவறான கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் முழு முதல்நீள பட்ஜெட் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைக் கண்டித்து பாஜக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி, செய்தித் தொடர்பாளர் நாராயண் திருப்பதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் கைவிடப்பட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டினார். இதில் ஏராளமான பாஜகவினர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அதைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, மத்திய அரசு தமிழ்நாடு மாநிலத்துக்கு நிலுவை வைத்துள்ள ஜிஎஸ்டி தொகையை முழுமையாகக் கொடுக்கவில்லை என்று தவறான தகவலை மாநில நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
இதற்கு, தகுதியில்லாதவரின் தவறான கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து ஆங்கில ஊடகத்துக்கு பதிலளித்த அவர், ''முதலில் அவரை பட்ஜெட் ஆவணங்களை முறையாகப் படிக்கச் சொல்லுங்கள். பொது இடங்களில் தகுதி இல்லாத நபர்கள் தெரிவிக்கும் தவறான தகவல்களுக்குப் பதிலளிக்கும் வேலையில் நான் இல்லை.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு டெல்லி சென்றேன். அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய நிதித்துறைச் செயலாளருடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம் சிறப்பானதாக இருந்தது. ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் மரியாதையுடன் நடந்து கொண்டோம்.
அந்தப் பேச்சுவார்த்தையின்போது யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தை எட்டினோம். அதன்படி பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தர வேண்டிய முழுமையான நிலுவைத் தொகை ரூ.28,000 கோடியாக இருந்தது" என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்