Magalir Urimai Thogai: இந்திய ஒன்றியமே திரும்பிப் பார்க்கும் முன்னோடித் திட்டம் உரிமைத்தொகை திட்டம்: அமைச்சர் உதயநிதி பெருமிதம்
Kalaignar Magalir Urimai Thogai Scheme: பெண்கள் சுதந்திரமாக செயல்பட அரசியல் பேச வேண்டும். பெண்கள் படிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இந்திய ஒன்றியமே திரும்பிப் பார்க்கும் முன்னோடித் திட்டமே கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் பெரிதும் எதிர்பார்த்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது. முன்னதாக திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிதிச்சுமை உள்ளிட்ட பல காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி இத்திட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக கடந்த இரு மாதங்களாக நடைபெற்றது. 3 கட்டங்களாக விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறும் வகையில் முகாம்கள் நடைபெற்றது. தொடர்ந்து வீடு, வீடாக சென்று விண்ணப்பத்தில் அளிக்கப்பட்ட தகவல்கள் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 14 அன்று காலையில் ரூ.1, 10 பைசா ஆகியவை அனுப்பி வங்கிக் கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்டன.
திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்
தொடர்ந்து அண்ணா பிறந்தநாளான செப். 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.,க்களால் இந்த திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 1.63 கோடி பேர் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் தகுதியுள்ள குடும்ப பெண்கள் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இதன்மூலம் தகுதியுள்ள மகளிருக்கு மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் மகளிர் உரிமைத் தொகைக்கான ஏடிஎம் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு, தகுதியான பெண்களுக்கு ஏடிஎம் கார்டுகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசினார்.
மகளிர் வாழ்க்கையை மாற்றி அமைக்கும்
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது, ’’இந்திய ஒன்றியமே திரும்பிப் பார்க்கும் முன்னோடித் திட்டமே கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம். இது மகளிர் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் திட்டம் ஆகும். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் வழங்கப்படும் டெபிட் கார்டு, பெண்களின் வாழ்க்கையை
மாற்றும் துருப்புச் சீட்டு.
பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறுவது குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் முக்கியமானது. பெண்கள் சுதந்திரமாக செயல்பட அரசியல் பேச வேண்டும். பெண்கள் படிக்க வேண்டும்’’ என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.