நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு உறுதியா? மாற்றம் வருமா? அரசின் நிலைப்பாடு இதுதான்!
திட்டமிட்டபடி தொடக்க பள்ளிகள் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் தொடங்குமா என்ற கேள்விக்கு 12 ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு தெரியுமென்று பெற்றோர்கள் எதிர்பார்ப்பு
கொரோனா காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தொடக்க பள்ளி மாணவர்களுக்கு இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தொடக்க பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பை அரசு ஒரு வாரம் முன்பு வெளியிட்டிருந்தது. அதே போல லாக்டவுன் காரணமாக தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் முதல் மூடப்பட்டுள்ள தொடக்க பள்ளிகள் வரும் நவம்பர் 1 முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வந்த நிலையில் குறிப்பட்ட தேதியில் பள்ளிகள் திறக்கப்படுமா அல்லது தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழல் வந்துள்ளது.
இது குறித்து இம்மாதம் 12ஆம் தேதி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில், அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு தேர்வுகள் துறை, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் மூலம் 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் முழுமையாக நவம்பர் முதல் இயங்க போவதாக அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த கலந்துரையாடலுக்கு பிறகுதான் இது குறித்த தெளிவான அறிக்கை வெளிவரும் என எதிர்பார்க்க படுகிறது. தற்போது தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் கொரோனா பெரிய அளவில் பரவவில்லை. சொல்லப்போனால் கொரோனா குறைந்து வருகிறது. பெரிய பாதிப்பை தமிழகத்தில் தற்போது ஏற்படுத்தவில்லை. இது ஒருபுறம்எனில் தமிழகததில் 18 வயதுக்கும் மேற்பட்ட பலரும் ஒருடோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மேலும் இரணடு டோஸ் போட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. வரும் நவம்பர் 1க்குள் பெரும்பாலானோர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருப்பார்கள் என்பதால் அரசு பள்ளிகளை திறக்கும் முடிவிற்கு வந்துள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது உள்ளிட்டவை தொடர்பாகவும் அரசு தேர்வுகள் துறை, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பதால், அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளி இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இதுகுறித்து பெற்றோர், ஆசிரியர்கள் ஆலோசனைகளை கேட்ட தமிழக அரசு அதன்பிறகு மருத்துவ குழுவினருடன் ஆலோசனை செய்தது. அதன் அடிப்படையிலேயே நவம்பர் 1முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதற்கான இறுதி முடிவு இந்த கலந்துரையாடல் முடிந்த பிறகு தெரியும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.