Thangam Thennarasu: ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் கலந்துகொள்வது ஏன்?- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
ஆளுநர் எனும் பதவி, பொறுப்பின் மீது முதல்வர் ஸ்டாலின் பெரும் மதிப்பு கொண்டிருப்பதால், தேநீர் விருந்தில் கலந்துகொள்வதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (15.08.2024) தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியது:
“முதல்வர் மருந்தகம் என்கின்ற பெயரில் தமிழ்நாட்டில் மருந்தாளுநர்கள் பயன்பெறத்தக்க அளவில் கூட்டுறவு அமைப்புகள் பயன்பெறத்தக்க அளவில் 1000 மருந்தகங்கள் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக திறக்கப்படும். குறிப்பாக, நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்று இருக்கக்கூடிய நோய்களால் பாதிக்கப்படக்கூடிய பொதுமக்கள் அவற்றிற்கு உரிய மருந்துகளை பெறுவதில் அதிகளவில் அவர்களுக்கு பணச் செலவு ஏற்படுகிறது.
அதை கருத்தில் கொண்டு, அவர்களின் சுமையைக் குறைக்கக்கூடிய வகையில், மிகக்குறைந்த விலையில், அந்த மருந்துகள் பொதுப்பெயர் வகையில் அதாவது ஜென்ரிக் மருந்துகள் என்கின்ற வகையில் பிராண்டடாக இல்லாமல் ஜென்ரிக் மருந்துகள் என்கின்ற வகையில் அந்த மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதில் உறுதி செய்யக்கூடிய வகையில் இந்த மருந்தகங்கள் அமைப்பதற்கு அவர்கள் இன்றைக்கு அறிவிப்பினை செய்திருக்கிறார்கள். இது பொது மக்களுக்குப் பயன்படக்கூடிய அதேவேளையில் பலருக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கக்கூடிய ஒரு மிகச்சிறந்த அறிவிப்பாக இந்த அறிவிப்பு அமைந்திருக்கிறது.
அண்மையில் நடந்த கேரள மாநில பேரழிவு நாமெல்லாம் அறிந்ததே. அதையொட்டி தமிழ்நாட்டினுடைய மலைப் பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் ஆகிய மலை நிலப்பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் குறித்த ஒரு முழுமையான ஆய்வுகளை செய்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைக்கு மிக முக்கியமான அறிவிப்பினை வழங்கியிருக்கிறார்.
கேள்வி: ஆளுநர் தேநீர் விருந்தை பொறுத்த அளவில், திராவிடர் கழகம் புறக்கணிப்பதாக தெரிவித்தது. அரசினுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
நிதி அமைச்சர் பதில் : அரசின் சார்பில் நம்முடைய ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். முதலமைச்சர், அமைச்சர் பெருமக்களுக்கு எல்லாம் ஆளுநர் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அரசின் சார்பில், ஆளுநர் அழைப்பினை ஏற்று அந்த விருந்தில் நாங்கள் கலந்து கொள்வதாக முடிவு செய்திருக்கிறோம். அந்த விருந்தில் பங்கேற்கிறோம்.
கேள்வி : தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்று ஆளுநர் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? தொடர்ந்து அவர் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார். அது பற்றி…
நிதி அமைச்சர் பதில்: ஆளுநரின் இத்தகைய நிலைப்பாடுகளை குறித்து அதற்கான விளக்கங்கள் அவ்வப்போது அமைச்சர்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் கருத்துக்கள் என்பது வேறு; அரசினுடைய நிலைப்பாடு என்பது வேறு. ஆளுநரின் இத்தகைய கருத்தியல் சார்ந்திருக்கக் கூடிய விஷயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது. ஆனால், ஆளுநர் என்கின்ற அந்த பதவியின் மீது, அந்தப் பொறுப்பின் மீது
முதலமைச்சர் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார்கள். எனவே,அரசினுடைய நிலைப்பாடு என்னவென்றால், அவருடைய பதவிக்கு, பொறுப்பிற்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் ஆளுநர் கொடுத்திருக்கின்ற இந்த அழைப்பினை ஏற்று இந்த விடுதலைத் திருநாள் விழாவில் அவர் அழைத்திருக்கக்கூடிய தேநீர் விருந்தில் நம்முடைய அமைச்சர் பெருமக்கள் அதில் பங்கேற்கிறார்கள்.
கேள்வி: ஆளுநர் பதவிக் காலம் முடிந்தும், நீட்டிக்கிறார் என்பதைத்தான் கூட்டணிக்கட்சினர் சொல்கிறார்கள். அதையெல்லாம் கடந்துதானே தேநீர் விருந்தில் கலந்துகொள்ளவிருக்கிறீர்கள்.
பதில் : நான் ஏற்கனவேசொன்னதுபோல, அரசியல் கருத்துக்கள், அரசியல் நிலைப்பாடுகள் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய கருத்தியலில் மாறுபாடுகள் இருக்கலாம், மாச்சரியங்கள் இருக்கலாம். ஆனால் ஆளுநர் பொறுப்பு என்கின்ற வகையில், ஆளுநர் பதவி என்பது ஒரு Institution. அந்த Institution-க்கு உரிய மரியாதையை நம்முடைய முதலமைச்சர் எப்போதும் அளிக்கிறார்.
அவர் ஒருபோதும் அளிக்க தவறியதில்லை. எனவே, அந்த கோட்பாடுகளின் அடிப்படையில், ஆளுநர் அழைப்பினை நாங்கள் ஏற்று அதில் கலந்துகொள்கிறோம்’’.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.