Seeman: "என்னை பேசுவதற்கு அண்ணன் ராஜ்கிரணுக்கு உரிமை உண்டு; என் பேச்சை முழுசா கேட்டாரா தெரியல” - சீமான்!
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டால், அவர்கள் எனக்கு ஓட்டு போட்விடுவார்களா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Seeman: கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டால், அவர்கள் எனக்கு ஓட்டு போட்விடுவார்களா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீமான் சர்ச்சை பேச்சு:
மணிப்பூரில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் பேராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பேசிய சீமான், "இங்கு இருக்கக் கூடிய கிறிஸ்தவர்களும் நமக்காக வாக்களிக்க போவது கிடையாது. நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் தான். அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது” என சீமான் காட்டமாக விமர்சித்திருந்தார். சீமானின் இந்த கருத்து சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக, நடிகர் ராஜ்கிரண், "இஸ்லாமியர்கள் தொடர்ந்து பொறுமையாக இருந்து வருவதால் கண்ட கழிசடைகளும் பேசினால் நன்றாக இருக்காது” என்றார்.
இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், மீண்டும் சிறுபான்மை சமூகத்தை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியிருக்கிறார்.
"மன்னிப்பு கேட்டால் ஓட்டு போடுவார்களா?”
அதன்படி, ”சிறுபான்மையினர் குறித்து தவறாக பேசிவிட்டதாக கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறும் ஜவஹருல்லா போன்றோர் நான் மன்னிப்பு கேட்டால் எனக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா?. வருந்துவதும் வருத்தம் தெரிவிப்பது எண்ணை சார்ந்த மக்கள் தான். அநீதிக்கு எதிராக உருவாக்கப்பட்ட மார்க்கங்கள் தான் இஸ்லாமும் கிருஸ்தவமும். ஆனால் இவர்கள் என்றைக்காவது அநீதிக்கு எதிராக போராடியது உண்டா?. முதுகில் குத்திய துரோகி கலைஞர் என ஜவஹருல்லா பேசினார். இன்று ஒரு சீட்டிற்காக அந்த துரோகியுடன் நிற்கின்றனர். சிறுபான்மையினர் குறித்த உரிமை, உறவு, வலியும் எல்லாம் எனக்குள்ளதான் நான் பேசுவேன்.
அநீநிதியை கண்டு பயப்படாமல் அதை எதிர்த்து போராடுபவனே உண்மையான ஜிகாத். இதை நான் சொல்லவில்லை. நபிகள் நாயகம் சொல்லி இருக்கிறார். அப்படி ஒரு இஸ்லாமியர் தமிழ்நட்டில் போராடினார் என்றால் அது பழனிபாபா தான். ஆனால் அவரையே சாகவிட்டவர்கள் தான் நீங்கள். அவரை யாராவது மதிக்கிறீர்களா? திமுகவை எதிர்த்ததால் யாரும் அவரை பற்றி பேசவில்லை. அவரையே ஒரு பொருட்டாக நீங்கள் எடுக்கவில்லை. என்னை பொருட்டாக மதிக்கப் போறீங்களா?” என்றார் சீமான்.
"எத்தனை போராட்டத்தில் ஈடுபட்டார் ராஜ்கிரண்”?
தொடர்ந்து பேசிய அவர், ”என்னை பற்றி பேசுவதற்கு நடிகர் ராஜ்கிரண் அண்ணனிற்கு அனைத்து உரிமையும் உண்டு. ஆனால், இஸ்லாமியர்களுக்காக எத்தனை போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்? சிஐஏ, முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் என்னுடன் வந்து வீதியில் நின்றாரா ராஜ்கிரண். அவர் வயதில் பெரியவர். நான் மதத்தை பற்றி பேசிவிட்டதாக நினைக்கிறார். ஆனால் என்னுடைய முழு பேச்சை கேட்டாரா என்று தெரியவில்லை. என் மீது கோபப்படுவதற்கு ராஜ்கிரணுக்கு உரிமை இருக்கிறது” என்று சீமான் தெரிவித்துள்ளார்.