Duraimurugan: வாரிசு அரசியல் என்றால் என்ன தெரியுமா? மோடிக்கு பாடம் எடுத்த துரைமுருகன்!
வாரிசு அரசியல் என்பது "இருப்பதை இழப்பவன் - தனக்கு ஒரு மகன் பிறந்து தன்னை போல தியாகம் செய்து கட்சிக்காக உழைத்தால் அவனுக்கு பதவி கொடுப்பதில் தப்பில்லை".
நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வ கணபதியே ஆதரித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், "ஆங்கிலம் அல்லது இந்தி தெரிந்தவர்கள்தான் நாடாளுமன்றம் போக வேண்டும். இல்லையெனில் நாடாளுமன்ற கட்டிடத்தை மட்டும்தான் பார்க்க வேண்டும். இந்த மாதிரி ஆளுங்க சட்டசபைக்கு வரலாம். ஆனால் நாடாளுமன்றத்திற்கு போக முடியாது என்றார்.
"இந்த தேர்தல் வெற்றி பெறுவதற்கான தேர்தல் மட்டுமல்ல. ஜனநாயகத்தை காப்பாற்றும் தேர்தல். நான் வந்தால் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கடவுள் என மோடி சொல்கிறார். ஹிட்லர் போல மோடி செயல்படுகிறார். இதை அனைத்தையும் நாம் எதிர்ப்பதால் மோடிக்கு கோபம் வருகிறது. ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கும் நபர்கள் நண்பர்களாக இருந்தாலும் எதிர்ப்போம். கூட்டணியில் இருந்தபோதும் காங்கிரஸ் எமர்ஜென்சியை கொண்டுவந்தது. அப்போது அதை எதிர்த்தது கருணாநிதிதான். முஸ்லிம்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் தவிர மற்றவர்கள் மட்டும் நம் நாட்டிற்கு வரலாம் என்கிறார் மோடி. தேசிய கொடியை வடிவமைத்தது இஸ்லாமிய மாது. இஸ்லாமியர்கள் தொழும் போது அதிகாரிகள் எட்டி உதைத்தார்களே; பிரதமர் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. கருப்பு பணத்தை மீட்டு அனைவரின் வங்கி கணக்கிலும் தலா 15 லட்சம் பணம் கொடுப்பேன் என்றார் மோடி. எங்களுக்கு ஓட்டு போட்டால் என் வீட்டு கதவு எப்போதும் உங்களுக்காக திறந்தே இருக்கும் என்கிறோம். அதற்காக நாம் இரவு கதவை திறந்து வைச்சுட்டா தூங்குறோம்.
வாரிசு அரசியலை ஒழிப்பேன் என பிரதமர் பேசி உள்ளார். வாரிசு அரசியல் என்றால் என்ன? ஆணாக இருப்பவன் திருமணம் செய்து கொள்கிறான். மிகுந்த ஆணாக இருப்பவன் குழந்தை பெற்று கொள்கிறான். இதற்கு மேல் இதைப்பற்றி பேச விருப்பமில்லை. கட்சி முக்கியம் கொள்கை முக்கியம் என உள்ளவர்கள் தான் திமுகவினர். வாரிசு அரசியல் என்பது "இருப்பதை இழப்பவன் - தனக்கு ஒரு மகன் பிறந்து தன்னை போல தியாகம் செய்து கட்சிக்காக உழைத்தால் அவனுக்கு பதவி கொடுப்பதில் தப்பில்லை". திமுகவை தேய்த்து அழித்து விடுவேன் என்கிறார் மோடி; சாவுக்கு அஞ்சாத படை திமுக. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் நிலை என்ன தெரியுமா? புல் முளைத்திருக்கும் இன்று. திமுகவை அழிக்க முடியாது. இந்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சத்தியமாக நாட்டில் ஜனநாயகம் இருக்காது" என்று பேசினார்.