Governor R.N. Ravi: மேற்கத்திய தத்துவங்கள் மக்களை பிரிக்கின்றன - ஆளுநர் ரவி பேச்சு
மேற்கத்திய தத்துவங்கள் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற புத்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ”மேற்கத்திய தத்துவங்கள் மக்களைப் பிரிக்கின்றது எனவும், இந்தியர்கள் அனைவரும் ஒருவர்தான்; ஒரே மரத்தின் ஆயிரம் இலைகள், அனைவரும் ஒரே குடும்பம், இந்தியா ஒரு குடும்பமாக வலிமையாக இருக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபோது ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார். அப்போதே திமுக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. ஆளுநர் ரவி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பேசும் சில விசயங்கள் பெரும் சர்ச்சையை தமிழ்நாடு அரசியல் களத்தில் கிளப்பியது. அதாவது, சிதம்ப்ரம் நடராசர் கோவிலில் குழந்தை திருமணம் நடைபெறவில்லை என ஆளுநர் கூறினார். ஆனால் தமிழ்நாடு காவல்துறையே சிறார் திருமணம் குறித்த வீடியோ வெளியானதையடுத்து தீட்சிதர்களை கைது செய்தது. அதேபோல் தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என பயன்படுத்தவேண்டும் எனக் கூறியதுடன் தனது அறிக்கையிலும் அப்படியே பயன்படுத்திவந்தார். இது அரசியல் களத்தில் பெரும் எதிர்ப்பினை அவருக்கு ஏற்படுத்தி தந்தது. குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மிகக் கடுமையான சொற்களால் தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பின்னர், தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கினார் ஆளுநர்.
இதையடுத்து முதலமைச்சரை மிகவும் சூடாக்கிய சம்பவம் எதுவென்றால், அமைச்சர் செந்தில் பாலஜியை ஆளுநர் தாமகவே முன் வந்து பதவி நீக்கம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த முதலமைச்சர் ஸ்டாலின், “ஆளுநருக்கு இதற்கு அதிகாரமில்லை, இதனை சட்டபடி சந்திப்போம் எனக் கூறியதுடன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நியமித்தார். இந்நிலையில் ஆளுநர் ரவிக்கு டெல்லி வட்டாரத்தில் இருந்து உத்தரவுகளும் அறிவுரைகளும் பறக்க, தனது முடிவில் இருந்து பின்வாங்கி, அமைச்சரின் பதவி நீக்கத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
அதன் பின்னர், முதலமைச்சரிடம் இருந்து குடியரசுத் தலைவருக்கு ஆளுநரை திரும்பபெறுங்கள் என்ற கோரிக்கையுடன் கடிதம் அனுப்பப்பட்டது. ஆளுநரும் அதன் பின்னர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இதையடுத்து கடந்த ஒரு மாத காலமாக அரசியல் கருத்துகள் எதுவும் பேசாமல் இருந்த ஆளுநர் ரவி தற்போது மேற்கத்திய தத்துவங்கள் குறித்து கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர், ஆன்லைன் ரம்மி மீதான தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பதாக திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த பின்னர், சில விளக்கங்களை கேட்ட ஆளுநர் அதன் பின்னர் தான் ஒப்புதல் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.