Weather Update: வட தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வட தமிழகத்தில் இன்று மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
“ தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானாது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு 15 செ.மீ., குறைந்தபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, ஈரோடு மாவட்டம் தாளவாடி கோவை மாவட்டம் சின்னக்கல்லார், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, வேலூர் மாவட்டம் பொன்னை அணை, தேனி மாவட்டம் மஞ்சளாறு பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
இன்று முதல் நாளை மறுநாள் வரை அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்க்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அதேபோல, 11-ந் தேதி மற்றும் 12-ந் தேதி தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுககு செல்ல வேண்டாம்.
இன்று மற்றும் நாளை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சென்னையிலும் தொடர்ந்து கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது. இதனால், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி. சோழவர், புழல், செம்பரம்பாக்கம் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
மேலும் படிக்க : Nobel Peace Prize 2021 | இரண்டு பத்திரிகையாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு