அதிருப்தியில் உள்ள அதிமுக நிர்வாகிகளை சந்திக்க புறப்படும் சசிகலா.. ஒரு வார ப்ளான் ரெடி...
புறப்படும் போது அவருக்கு அவருடைய ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வழி அனுப்பி வைத்தனர்.
அதிமுக கொடியுடன் அரசியல் சுற்றுப்பயணத்தை பயணத்தை துவங்கிய சசிகலா, ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
தென் மாவட்டங்களில் ஒரு வார அரசியல் பயணம் மேற்கொள்ள இன்று சென்னையில் இருந்து தஞ்சாவூர் புறப்பட்டார், புறப்படும் போது அவருக்கு அவருடைய ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வழி அனுப்பி வைத்தனர்.சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சசிகலாவிற்கு ,25 இடங்களில் வரவேற்பு வழங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அவரின் பயண விவரங்கள் பின்வருமாறு:
நாளை தஞ்சாவூரில் நடைபெறும் டி.டி.வி தினகரன் மகள் திருமண வரவேற்பில் பங்கேற்கிறார்.
28 ஆம் தேதி மதுரை செல்லும் சசிகலா அங்கு முத்துராமலிங்கம் மற்றும் மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தி அதன் பின் ஆதரவாளர்களை சந்திக்கிறார், பின்னர் கோரிப்பாளையம் பகுதியில் ஆதரவாளர்களை சந்திக்க திட்டம்.
29 ஆம் தேதி ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்திக்கிறார்.
30 ஆம் தேதி காலை பசும்பொன்னில் முத்துராமலிங்கம் குரு பூஜையில் பங்கேற்ற பின் அதரவாளர்களுடன் சந்தித்து பேசும் சசிகலா அன்றைய தினமே தஞ்சாவூர் திரும்புகிறார்.
1 ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சசிகலா ஆதரவாளர்களை சந்திக்கிறார்.
இதன் பின்னர் திருநெல்வேலி உட்பட மேலும் சில மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி, சசிகலா பெங்களூரிலிருந்து சென்னை வந்தபோது ஓசூரிலிருந்து சென்னைவரை அவருக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 16ம் தேதி மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா நினைவிடங்களுக்கு சென்று சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அப்போதும் ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். தொடர்ந்து , அக்டோபர் 17-ம் தேதி, தி.நகரிலுள்ள எம்.ஜி.ஆரின் நினைவில்லத்துக்குச் சென்ற சசிகலா, அ.தி.மு.க கொடியை ஏற்றியும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் திறந்து வைத்தார். இந்நிலையில் அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து அக்கட்சியின் தலைவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவும் சூழலில் அரசியல் ரீதியான சுற்றுப்பயணத்தையும்,தொண்டர்களை சந்திப்பையும் சசிகலா திட்டமிட்டு இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா இந்த வாரம், தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செல்லவிருக்கும் நிலையில் அது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்