ABP Exclusive: வீண் முயற்சி வேண்டாம்; நீதிமன்ற தீர்ப்பே சசிகலாவுக்கு சம்மட்டி அடி - ஜெயக்குமார் சிறப்பு பேட்டி
அமமுக தொடங்கி அவர்களின் செல்வாக்கு தெரிந்துவிட்டது. அதேபோல், சசிகலா சுற்றுப்பயணம் சென்றபோது, அவர்களுக்கு எந்த ஆதரவும் வரவில்லை.
சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பொதுக்குழு நீக்கிய தீர்மானம் செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சசிகலாவுக்கு கொடுத்த சம்மட்டி அடி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இந்த தீர்ப்பு குறித்து ஏபிபி நாடு அவரிடம் பேட்டி கண்டது. அந்தப்பேட்டியில், நீதிமன்றம் உத்தரவை மீறி சசிகலா செயல்பட்டதால் அதற்கான பதிலடியை அவர் சந்திப்பார் என்றும் கூறினார்.
கேள்வி: சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற நீதிமன்ற உத்தரவை எப்படி பார்க்கிறீர்கள்?
இது நல்ல தீர்ப்பு, வரவேற்கக்கூடிய தீர்ப்பு. தொண்டர்கள் எதிர்பார்த்த தீர்ப்பு இது.ஏனென்றால், கட்சிக்கு தொடர்பில்லாத ஒருவர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இனிமேலாவது சசிகலா இதுபோன்ற வீண் முயற்சி எடுக்காமல் இருப்பது நல்லது. பொதுக்குழு எடுத்த முடிவுதான் இறுதியானது. இந்த தீர்ப்பின் மூலம் நியாயம் நிலைநாட்டப்பட்டுள்ளது. கட்சியின் லெட்டர் பேட், கொடியை உபயோகிக்க முடியாது. பொதுச்செயலாளர் என தன்னை சசிகலா விளம்பரபடுத்த முடியாது.
கேள்வி: அப்போ, சசிகாலதான் பொதுச்செயலாளராக வேண்டும் என்று நீங்கள் அனைவரும் எடுத்த முடிவு?
பொதுக்குழு எடுத்த முடிவுதான் இறுதியானது. 2017ஆம் ஆண்டு பொதுக்குழு எடுத்த முடிவின்படிதான் இந்திய தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், எந்த முகாந்திரம் இல்லாமல் உரிமையியல் நீதிமன்றத்தில் போனதால், அந்த நீதிமன்றம் எங்களுக்கு சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
கேள்வி: தீர்ப்புக்கு பின், சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என லெட்டர் பேட்டில் பயன்படுத்தினால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?
அதற்குதான், சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் உரிமையியல் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை எங்களுக்கு வழங்கியிருக்கிறது. இதற்கு மேல் 100 சதவீதம் உபயோகிக்கமாட்டார்கள். அதையும் மீறி செய்தால், நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். அதுகுறித்து கட்சி நடவடிக்கை எடுக்கும்.
கேள்வி: நீதிமன்றம் மூலம் தீர்ப்பு வந்தாலும், மக்கள் மன்றம் மூலம் அதிமுகவை சசிகலா மீண்டும் கைப்பற்றுவார் என அவர்களின் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
அமமுக தொடங்கி அவர்களின் செல்வாக்கு தெரிந்துவிட்டது. அதேபோல், சசிகலா சுற்றுப்பயணம் சென்றபோது, அவர்களுக்கு எந்த ஆதரவும் வரவில்லை. எதிர்காலத்தில் நீதிமன்றத்தை நாடுவது வீணான முயற்சி ஆகும்.
கேள்வி: அதிமுக பொதுக்குழு தொடங்க உள்ள நிலையில், இரட்டை தலைமை தொடருமா? அல்லது எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவாரா?
கட்சி தற்போது சீராக செல்கிறது. இந்த கேள்விக்கே இடமில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்