"உங்களால் பலர் இறந்தனர்" - விஜய் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்தைத் தடுத்து நிறுத்திய பெண் எஸ்.எஸ்.பி!
பாஸ் இல்லாத தொண்டர்கள் சிலரை ஆனந்த் மைதானத்துக்குள் அனுமதிக்க முயற்சித்த போது எஸ்.எஸ்.பி. இஷா சிங், ஆனந்திடம் கடுமையாக எதிர்வினையாற்றி, பாஸ் இல்லாதவர்களை உள்ளே விடாமல் தடுத்தார்.

புதுச்சேரி: பாஸ் இல்லாத தொண்டர்களை உள்ளே அனுமதிக்க கோரி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களை அனுப்பி வந்த நிலையில் இதனை கண்ட போலீசார் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.
புஸ்ஸி ஆனந்த்க்கு எச்சரிக்கை விட்ட எஸ்.எஸ்.பி. இஷா சிங்
தவெக தலைவர் விஜய் புதுச்சேரி எக்ஸ்போ கிரவுண்ட்டில் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டத்திற்கு பாஸ் இல்லாத தொண்டர்களை உள்ளே அனுமதிக்க கோரி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களை அனுப்பி வந்தார். இதனை கண்ட போலீசார் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர். கூட்டத்திற்கு புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என விதிமுறை இருந்தது. ஆனால் பொதுக்கூட்டத்தில் ஏறி குதித்து செல்லும் தவெக தொண்டர்களை புதுச்சேரி போலீசார் விரட்டிச் சென்று ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
கட்சி ஆரம்பித்த பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், புதுச்சேரியில் தனது முதல் நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார். தவெகவின் இந்தப் பொதுக்கூட்டத்துக்குப் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, பாஸ் இல்லாத தொண்டர்கள் சிலரைத் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மைதானத்துக்குள் அனுமதிக்க முயற்சித்தார். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.எஸ்.பி. இஷா சிங், புஸ்ஸி ஆனந்திடம் கடுமையாக எதிர்வினையாற்றி, பாஸ் இல்லாதவர்களை உள்ளே விடாமல் தடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
பொதுக்கூட்டத்துக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் வரக்கூடாது, அதிகபட்சமாக 5000 பேருக்கு மட்டுமே அனுமதி, அவர்களுக்கும் பாஸ் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே முக்கியக் கட்டுப்பாடு. அதன்படி, தவெக சார்பில் பாஸும் விநியோகிக்கப்பட்டது.
ஆனால், விஜய்யைப் பார்க்கப் பாஸ் இல்லாமலும் நிறையத் தொண்டர்கள் வந்திருந்தனர். அவர்களும் மைதானத்தைச் சூழ்ந்திருந்தனர். அதில் ஒரு பகுதியினரை உள்ளே அனுமதிக்குமாறு, தவெகவின் பொதுச் செயலாளர் ஆனந்த்தும் சில மாவட்டச் செயலாளர்களும் அங்கிருந்த பெண் காவல்துறை அதிகாரியிடம் கோரினர். மேலும், அவர்களை உள்ளே அழைக்கவும் முயன்றனர்.
இஷா சிங் கொடுத்த பதிலடி
உடனே, அதைத் தடுத்த பெண் எஸ்.எஸ்.பி. இஷா சிங், "நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் சொல்லாதீர்கள். உங்களால் பலர் இறந்திருக்கிறார்கள்." என மிகவும் கடுமையாகக் கூறி, தொண்டர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். நூற்றுக்கணக்காகக் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில், விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் சரியாக அமல்படுத்தி உறுதியாக நின்ற இஷா சிங்கை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
யார் இந்த இஷா சிங்?
- இஷா சிங் இதற்கு முன்பு புதுச்சேரியின் லஞ்ச ஒழிப்புத் துறையில் எஸ்.பி.யாகப் பணியாற்றி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் எஸ்.எஸ்.பி.யாகப் பதவி உயர்வு பெற்றார்.
- இவர் மகாராஷ்டிராவில் பிறந்தவர். இஷா சிங்கின் தாத்தா, அப்பா இருவருமே ஐ.பி.எஸ். அதிகாரிகள்.
- அவருடைய அப்பா Y.P. சிங், சில ஊழல் வழக்குகளில் நேர்மையாக விசாரணை நடத்தியதால் ஓரங்கட்டப்பட்டு, மனமுடைந்து 2004-ல் காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
- அப்போதிருந்தே ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்பதுதான் இஷாவுக்கு விருப்பம். அவர் 'National School Of Law'-வில் சட்டம் படித்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
குறிப்பாக, சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காகக் குரல் கொடுப்பவராக இருந்தார். விஷவாயு தாக்கி உயிரிழந்த மலம் அள்ளும் தொழிலாளர்களின் மனைவிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 10 லட்சம் நிவாரணமும் பெற்றுக்கொடுத்திருக்கிறார். சமீபத்தில் ஒரு மேடையில் இஷா சிங் பேசியபோது, "வழக்கறிஞராக இருந்தபோது நான் இரண்டு விதமான நபர்களைச் சந்தித்திருக்கிறேன். ஒரு பக்கம் சமூகத்தின் இழிவு மனப்பான்மையால் மலம் அள்ளப் போய் உயிரிழந்த தொழிலாளர்களின் மனைவிகள். இன்னொரு பக்கம் எல்லா அதிகாரமும், எதையும் சாதிக்கும் வல்லமையும் வாய்க்கப்பெற்ற சக்திமிக்கவர்கள்.
ஆனால், எல்லாருக்கும் மேலானது நம்முடைய சட்டம்தான். சட்டத்துக்கு முன்பாக அனைவரும் சமம். எந்த பேதமும் கிடையாது. இதை நான் பேசியபோது, 'அதெல்லாம் வெறுமனே சட்டப் புத்தகத்தில் மட்டுமே சாத்தியம். யதார்த்தம் வேறாக இருக்கும்' என்றனர். சட்டத்தை எந்த பேதமும் இல்லாமல் அமல்படுத்தும் இடத்துக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் ஐ.பி.எஸ். ஆனேன்" என்று அவர் கூறியிருக்கிறார். இவர்தான் இன்றைக்குக் கட்டுப்பாட்டை மீறி தவெகவினர் சிலரை அனுமதிக்க முயன்றபோது, கடுமையாக எதிர்வினையாற்றி அவர்களைத் தடுத்து நிறுத்தி இருக்கிறார்.





















