விவசாயத்திற்குள் புகுந்த சா(தீ) ; அதிகாரிகளால் பரபரப்பான விழுப்புரம்... தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல்
அதிகாரிகள் முதலில் நீங்கள் என்ன 'சாதி' என்று தான் கேட்கிறார்கள், விவசாயிகளுக்கு ஏது சாதி, நாங்கள் சாதி பாகுபாடு இல்லாமல் தான் இப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம்.
விழுப்புரம்: விழுப்புரத்தில் பொங்கல் பரிசுக்கு வழங்கப்படும் கரும்புக்கு அதிகாரிகள் கொள்முதல் செய்யும் பொழுது விவசாயிகளின் சாதியை கேட்டு கரும்பு வாங்குவதை புறக்கணிப்பதாக கூறி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழர்கள் பாரம்பரியமாக திருவிழாவாக கொண்டாடப்படும் தை முதல் நாள் பொங்கல் விழாவானது தமிழர்களின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழா என்று கூறியவுடன் முதலில் நமக்கு நினைவு வருவது இனிக்கும் பொங்கல், அதுபோக இனிக்கும் கரும்பு. இந்த கரும்பு என்பது பொங்கல் பண்டிகையில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. பொங்கல் திருவிழாவை பொருத்தவரை விவசாயத்தை ஒப்பிட்டு இந்த விழாவானது கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம் வாழ் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றை பொங்கல் தொகுப்பாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, பொங்கல் தொகுப்பு விநியோகத்துக்காக, வீடுவீடாக டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ஜன.9-ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், கரும்பு கொள்முதல் தொடர்பாக, கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகளை கொள்முதல் செய்ய சென்னை தவிர்த்த பிற மாவட்ட ஆட்சியர்களைத் தலைவர்களாக கொண்டும், சென்னையில் மண்டல கூடுதல் பதிவாளரை தலைவராகக் கொண்டும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரும்பு கொள்முதல் குழு மூலம் அந்தந்த வட்டாரங்களில் கரும்பு கொள்முதல் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, கரும்பு அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக கொள்முதல் செய்யப்படுகிறது. எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்களிடமிருந்தோ, வியாபாரிகளிடமிருந்தோ, பிற மாநிலங்களிலிருந்தோ கரும்பு கொள்முதல் செய்யப்படுவதில்லை. விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதல் விலை மின்னணு பரிவர்த்தனை மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
கரும்பு விவசாயிகள் https://rcs.tn.gov.in/rcsweb/sugarcane-form என்ற இணையதள முகவரி வாயிலாகவோ அல்லது மாவட்டவாரியாக இணை பதிவாளர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டோ கரும்பு கொள்முதல் படிவத்தில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தாங்கள் விளைவித்த கரும்புகளை விற்பனை செய்யலாம். மேலும், கரும்பு கொள்முதல் தொடர்பாக இடைத்தரகர்களோ, வியாபாரிகளோ விவசாயிகளை அணுகினாலோ, தவறான தகவல்களைப் பரப்பினாலோ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 6,19,756 ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிப் போர் உட்பட மொத்தம் 6,20,191 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு கொள்முதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் குச்சிபாளையம், மரகதபுரம், அத்தியூர் பிடாகம் பகுதியில் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். இதில் பிடாகம் பகுதியில் கரும்பு கொள்முதல் செய்யும் அதிகாரிகள் முதலில் நீங்கள் என்ன 'சாதி' என்று தான் கேட்கிறார்கள், விவசாயிகளுக்கு ஏது சாதி, நாங்கள் சாதி பாகுபாடு இல்லாமல் தான் இப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம், ஆனால் அதிகாரிகள் சாதி அடிப்படையில் கரும்பு கொள்முதல் செய்வதாக கூறி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.