(Source: ECI/ABP News/ABP Majha)
Vikravandi By-Elections: பாமகவிற்கு பறிபோன மாநில கட்சி அந்தஸ்து! விக்கிரவாண்டி தேர்தலில் மாம்பழ சின்னத்தில் போட்டியிட சிக்கல்..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு, அவர்களின் ஆஸ்தான சின்னமான மாம்பழம் சின்னம் கிடைக்குமா என்பது கேள்வியாக எழுந்துள்ளது.
மக்களவை தேர்தலை தொடர்ந்து நாடு முழுவதும் காலியாக உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதில், தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியும் அடங்கும்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற புகழேந்தி, தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இந்தநிலையில், மீண்டும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் அதிமுகவும், தேமுதிகவும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டது.
பாஜக போட்டியிடாததால் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. அதனடிப்படையில் பாமக மாநில துணைத்தலைவர் அன்புமணி வேட்பாளராக களமிறங்குவார் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். அதேபோல், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிட்டார். விழுப்புரத்தை சேர்ந்த இவர், தருமபுரி தொகுதியில் சுமார் 60 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தார். இதன் காரணமாக, பாமக சார்பில் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். சௌமியா அன்புமணி பெற்ற தோல்விக்கு அபிநயா பெற்ற வாக்குகளே காரணம் என்று கூறப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து இல்லையா..?
2016 சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டபோது விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி சுமார் 41,000 வாக்குகளை பெற்றிருந்தார். இதன் காரணமாகவே, இந்த இடைத்தேர்தலில் பாமக இவரை களத்தில் இறக்கியுள்ளது. இவருக்கு ஆதரவாக விக்கிரவாண்டி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு, அவர்களின் ஆஸ்தான சின்னமான மாம்பழம் சின்னம் கிடைக்குமா என்பது கேள்வியாக எழுந்துள்ளது.
தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 10 தொகுதியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி வெறும் 4.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இதையடுத்து, பாமக கட்சி தனது மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது. இதன் காரணமாக, பாமகவுக்கு மாம்பழ சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, மாநில கட்சி அந்தஸ்து பெறாத விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை, தற்போது மாநில கட்சி அந்தஸ்து பெற்று சின்னத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையை பெற்றுவிட்டது.
முன்னதாக, மாநில கட்சி அந்தஸ்தை பெறாத (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்) மதிமுகவுக்கு, மக்களவை தேர்தலின்போது பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை. அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்த நிலைமை வந்துவிடக்கூடாது என விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்களுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை பொறுத்தே பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம் கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும்.