Vijayakanth Death: 'விஜயகாந்த் கோபப்பட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கும்’ - அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த்..
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை தீவித்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்தை கடைசியாக காண தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேற்று தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது பூத உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் இருந்து சென்னை தீவித்திடலில் மாற்றப்பட்டது. அங்கேயும் மக்கள் கூட்டம் கட்டுகடங்காமல் வந்த வண்ணம் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என லட்சக்கணக்கானவர்கள் வருகை தருகின்றனர். இன்று மாலை 4.45 மணிக்கு அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. நேரில் வர முடியாத பிரபலங்கள் சமூக வலைத்தளத்திலும் வீடியோ மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை முதல் பல பிரபலங்கள் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் விஜய், எம்.எஸ். பாஸ்கர், நடிகை குஷ்பு, சுந்தர் சி, பாக்கியராஜ் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த இன்று காலை சென்னைக்கு வந்தடைந்தார். சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார், அதனை தொடர்ந்து பேசிய அவர், “ மனதுக்கு மிகவும் கடினமாக உள்ளது. அவரை பற்றி பேச வேண்டும் என்றால் நிறைய உள்ளது. நட்புக்கு இலக்கணமாக இருந்தவர். அவருடன் ஒரு முறை பழகிவிட்டால் வாழ்க்கையில் அதனை மறக்க முடியாது. நண்பர்கள் மீதும் அரசியல்வாதிகள் மீதும் கோபப்படக்கூடியவர். ஆனால் அவர் கோபப்பட்டால் அதில் ஒரு நியாயமான காரணம் இருக்கும். அந்த கோபத்திற்கு பின்னால் ஒரு அன்பு இருக்கும், சுயநலம் இருக்காது. தைரியமானவர், வீரமானவர். நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சுயநினைவின்றி இருந்த போது ஏராளமான மக்கள் ஒன்று திரண்டு இருந்தனர், அப்போது விஜயகாந்த் என்ன செய்தார் என்று யாருக்கும் தெரியாது. 5 நிமிடத்தில் அங்கு இருக்கும் மக்களை அப்புறப்படுத்தினார்.
அதேபோல் மலேசியாவில் நிகழ்ச்சி ஒன்று முடிந்த பின் மிகவும் சோர்வாக இருந்த தருணத்தில் ரசிகர்கள் சூழ்ந்த நிலையில் இருந்த போது, விஜயகாந்த் 2 நிமிடங்களில் அங்கு கூடி இருந்த ரசிகர்களை அப்புறப்படுத்தி என்னை பூப்போல் அழைத்துச் சென்றார். அப்படிப்பட்ட ஒரு மனிதரை கடைசி நாட்களில் பார்க்கும் போது மிகவும் கவலையாக இருந்தது. கேப்டன் என்பது மிகவும் பொறுத்தமான பேர். 71 வயதில் அனைத்தையும் சாதித்து விட்டு சென்றுள்ளார். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் இருப்பவர் யார் - விஜயகாந்த். விஜியகாந்த் நாமம் வாழ்க” என மனம் உருகி பேசியுள்ளார்.