Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Cent Govt On TN Delta: கடந்த 2020ம் ஆண்டு அப்போதைய அதிமுக தலைமையிலான அரசு, தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் எம்.பி., சுதா கேள்வி:
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி., சுதா, மக்களவையில் எழுத்து மூலமாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார். அதில், “
- காவிரி டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூரில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் எண்ணிக்கை
- கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கண்ட மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் அல்லது எரிவாயு ஆய்வுத் திட்டங்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் (NOC) அல்லது சுற்றுச்சூழல் அனுமதி பெற நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் விவரங்கள் மற்றும் இடங்களின் பட்டியல் மற்றும் ஆய்வுகளுக்கு அனுமதி கோரிய நிறுவனங்கள்
- டெல்டா மாவட்டங்களை தமிழக அரசு சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கவும், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுத் திட்டங்களை தடை செய்யவும் ஏதேனும் மத்திய கொள்கை உள்ளதா?” என காங்கிரஸ் எம்.பி., சுதா வினவியிருந்தார்.
மத்திய அரசு விளக்கம்:
காங்கிரஸ் எம்.பியின் கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதன்படி, “
- காவிரி டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூரில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் (MoEF&CC) கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய சுற்றுச்சூழல் அனுமதி (EC) எதுவும் வழங்கவில்லை. இருப்பினும், MoEF&CC கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று திட்டங்களுக்கு EC செல்லுபடியை நீட்டித்துள்ளது.
- கடந்த ஐந்து ஆண்டுகளில் 16.01.2020 தேதியிட்ட MoEF & CC அறிவிப்பின்படி, B2 வகையின் கீழ் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி (EC) கோரும் பின்வரும் மூன்று முன்மொழிவுகள் SEIAA, தமிழ்நாடு அரசிடம் நிலுவையில் உள்ளன:
i. ராமநாதபுரம் மாவட்டத்தில் CY-ONHP-2018/3 OALP பிளாக்கில் உள்ள 20 எண்கள் ஆய்வுக் கிணறுகளை தோண்டுவதற்கான ONGC முன்மொழிவு.
ii. எம்.எஸ். வேதாந்தா லிமிடெட் (Division Cairn Oil & Gas), Proposal CY-OSHP-2017/2 ஹைட்ரோகார்பன் பிளாக் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களின் கடற்கரையிலும், வங்காள விரிகுடாவில் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் அமைவதற்கான முன்மொழிவு.
iii. வேதாந்தா லிமிடெட் (Division Cairn Oil & Gas), Proposal CY-OSHP-2017/1 ஹைட்ரோகார்பன் பிளாக் தமிழ்நாட்டில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் கடற்கரையில் அமைப்பதற்கான முன்மொழிவு
- சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 இன் விதிகளின் கீழ் சிறப்புப் பாதுகாப்பின் தேவையை நிவர்த்தி செய்வதற்காக சில பகுதிகளை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் (ESZ)/ Eco-Sensitive Arca (ESA) என மாநில அரசிடம் இருந்து பெறப்படும் முன்மொழிவின் அடிப்படையில் அறிவிக்கப்படுகிறது. ஆனால், தமிழக அரசிடம் இருந்து அத்தகைய முன்மொழிவு எதுவும் அமைச்சகத்தில் பெறப்படவில்லை. மேலும், இந்தியாவில் ஹைட்ரோகார்பன்களின் ஆய்வு மற்றும் உற்பத்தியானது எண்ணெய் வயல்களின் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், 1948 மற்றும் அதன் உதவியாளர் PNG விதிகள், 1959 (அவ்வப்போது திருத்தப்படும்) ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது” என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
ஏமாற்றினாரா எடப்பாடி பழனிசாமி?
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மாவட்டங்களாக அறிவிக்க எந்த முன்மொழிவையும், தமிழக அரசு வழங்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த 2020ம் ஆண்டே டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கொள்கை முடிவு எடுத்து அப்போதைய அதிமுக தலைமையிலான அதிமுக அரசு அறிவித்து இருந்தது. இந்த இருவேறு பதில்களால் டெல்டா மாவட்டங்கள் தற்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், விவசாய பணிகளை பாதிக்கக் கூடிய திட்டங்கள், எதிர்காலத்தில் அங்கு செயல்படுத்தப்படுமோ என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.
வாக்கு வங்கி அரசியலா?
இதனிடையே, தேர்தல் நெருக்கத்தில் தான் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்த பகுதிகளில் அதிகமாக உள்ள சசிகலா மற்றும் டிடிவி தினகரன் சமூகத்தை சேர்ந்த, வாக்காளர்களை தனது பக்கம் ஈர்க்கவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற போலி அறிவிப்பை வெளியிட்டாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. அதேநேரம், அதிமுக அறிவித்த கொள்கை முடிவை தொடர்ந்து தற்போது வரை டெல்டா மாவட்டங்களில், ஹைட்ரோகார்பன் தொடர்பான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.