“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
மீண்டும் ஏக்நாத் ஷிண்டேவையே முதல்வராக்க பாஜக ஒத்துழைப்பு நல்கும் என்றும் தேவேந்திர பட்னாவிஸ்க்கு தேசிய அளவில் பாஜகவில் பொறுப்பு வழங்கப்பட்டு கவுரவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆவதுதான் பிராந்திய கட்சித் தலைவர்களின் மிகப் பெரிய கனவு. அப்படி கிடைத்த முதல்வர் பதவியை விட்டுத் தர யாருக்குதான் மனது வரும் ? மாநிலத்தின் நம்பர் 1 நபராக சர்வ வல்லமை படைத்த அதிகாரம் பலம் கொண்டவராக இருக்கும் முதல்வர் பதவி ஒன்றும் சாதாரண குமாஸ்தா பதவி அல்ல. அது ஒட்டுமொத்த மாநிலத்தை கட்டுப்படுத்து சக்திக் கொண்ட பதவி.
அப்படிப்பட்ட பதவி இந்த முறை மகாராஸ்ட்ராவில் யாருக்கு கிடைக்கப் போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
யாருக்கு அதிர்ஷ்டம் ? யாருக்கு வாய்ப்பு ?
நடந்து முடிநெத மஹாராஸ்ட்ரா தேர்தலில் மஹாயுதி கூட்டணி அபார வெற்றி பெற்றது. ஆனால், இதுவரை முதல்வர் யார் என்பதை அவர்களால் முடிவு செய்ய முடியவில்லை. மஹாயுதி கூட்டணி கட்சிகளுடையே இந்த நேரம் வரை இழுபடி நீடிக்கிறது. மொத்தம் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளீல் ஆளும் பாஜக – சிவசேனா – தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மஹாயுதி கூட்டணி மட்டுமே 233 தொகுதிகளில் வெற்றிப் பெற்று சாதனை படைத்தது.
சிவசேனா கட்சித் தலைவரும் முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டாலும் தேர்தலில் பாஜக மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அதனால், அந்த கட்சியை சேர்தவரையே முதல்வராக அறிவிக்க வேண்டும் என அந்த கட்சியினர் விரும்பி, அதற்கான கோரிக்கைகளை கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வந்தனர்.
இதனால், துணை முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த தேவேந்திர படனாவிஸை பாஜக முதல்வராக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், சிவசேனா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டேவையே மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே விட்டுக் கொடுத்துவிட்டால், பாஜக அவரையும் அரசியலில் இருந்து ஓரங்கட்டிவிடும் என்று அவரது ஆதரவாளர்கள் அஞ்சுகின்றனர்.
அதே நேரத்தில் இந்த கூட்டணியில் உள்ள தேசியவாத கட்சித் தலைவரான அஜித் பவார், முதல்வர் நாற்காலி போட்டியிலிருந்து தான் ஒதுங்கிக் கொள்வதாகவும் பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் அறிவித்தார். இதனால், மஹாராஸ்ட்ராவில் முதல்வரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.
ஷிண்டே-வா? அல்லது பட்னாவிஸ்-சா?
இந்நிலையில், பாஜக பெரும்பான்மையான இடங்களில் வென்றுள்ள நிலையில், முதல்வர் பதவியை ஏன் மற்றொரு கட்சித் தலைவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை பாஜகவினர் எழுப்பி வருகின்றனர். இதனால், துணை முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பாஜக தேசிய தலைமை ஆதரவளித்து ஏக்நாத் ஷிண்டேவிடம் பேச வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், ஷிண்டே தரப்பு முதல்வர் நாற்காலியை விட்டுக் கொடுக்கும் மன நிலையில் இல்லை. இதனால், பீகாரில் நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவியை பாஜக கூட்டணி அளித்தததுபோல், ஏக்நாத் ஷிண்டேவிற்கும் அந்த மரியாதையை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை சிவசேனா கட்சி தரப்பில் வலுத்து வருகிறது.
இன்று முடிவு எடுத்தாக வேண்டும்..?
மஹாராஸ்ட்ரா அரசின் பதவி காலம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், புதிய முதல்வரை அறிவித்து ஆட்சியை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் மாஹாயுதி கூட்டணி இருக்கிறது.
எனவே, இன்றே அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிக்கப்பட்டு, முதல்வர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும், மீண்டும் ஏக்நாத் ஷிண்டேவையே முதல்வராக்க பாஜக ஒத்துழைப்பு நல்கும் என்றும் தேவேந்திர பட்னாவிஸ்க்கு தேசிய அளவில் பாஜகவில் பொறுப்பு வழங்கப்பட்டு கவுரவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் தலைவர் பதவி முடிவடைந்துள்ள நிலையில், புதிய பாஜக தேசிய தலைவராக கூட தேவேந்திரபட்னாவிஸ் தேர்வு செய்யப்படலாம் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன