முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகார் அளித்தவர் கைது
சுமார் ஒரு மாதம் காலமாக தலைமறைவாக இருந்த விஜயநல்லதம்பி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகார் அளித்த விஜய நல்லதம்பி கைது செய்யப்பட்டார். வேலை வாங்கி கொடுப்பதாக ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி ஆவின் உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி கோரிய முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவர் தலைமறைவானார். இதனையடுத்து, அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 20 நாட்களாக தேடுதல் வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 5ம் தேதி கர்நாடகாவில் வைத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வருகிற ஜனவரி 20 ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே கடந்த 6ம் தேதி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அவருக்கு நான்கு வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது. அதோடு பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர். தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அவர் ஜாமீனின் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் கொடுத்த முன்னாள் விஜயநல்லதம்பி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கோவில்பட்டி பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். வேலை வாங்கி தருவதாக 30 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடி செய்ததாக ரவீந்தரன் என்பவர் விஜயநல்லதம்பி மீது அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் ஒரு மாதம் காலமாக தலைமறைவாக இருந்த விஜயநல்லதம்பி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவல்துறையினர் விருதுநகர் குற்றப்பிரிவு காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்