Vijay Politics: அதிரடியாக அரசியலில் குதித்த விஜய்! வாழ்த்து சொன்ன உதயநிதி ஸ்டாலின்..
நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் (Vijay) . ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த விஜய், சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில், விஜய் அரசியலுக்கு வருவதாக சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் விஜய்.
அரசியலில் குதித்த விஜய்:
நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் இன்று அதாவது பிப்ரவரி 2ஆம் தேதி பதிவு செய்துள்ளனர். அதில் தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam) என பெயர் முடிவு செய்யப்பட்டு, அதனை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam) வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். அதே நேரத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஜய், ”இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.
உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து:
எனவே, அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன்" என்றார். தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போது அரசியலில் களமிறங்கிய விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
அதன்படி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "ஜனநாயகத்தில் நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமை உள்ளது. புதிய கட்சியை தொடங்கிய விஜய்க்கு எனது பாராட்டுகள். நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், ”தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இவரை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், "கட்சியை தொடங்கி உள்ள விஜய் மண்ணை ஆள்வதற்கு முன்பு முதலில் மக்களின் மனதை வெல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் கட்சியை தொடங்கியபோது ஒரு வெற்றிடம் இருந்தது. அதனால், அவர் வெல்ல முடிந்தது. நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை தக்க வைக்க கடினமாக உழைக்க வேண்டும்" என்றார்.