மீண்டும் தேர்தலுக்கு தயாராகும் விஜய் மக்கள் இயக்கம்... விஜய் படம், கொடி பயன்படுத்த அனுமதி !
கடந்த ஆண்டு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்கி மொத்தம் 129 பேர் வெற்றி பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 19 ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, தேர்தல் நடைபெற உள்ள பகுதிகள் முழுவதும் நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தொடர்ந்து, அரசியல் கட்சிகள் நேற்று முதலே உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கி விட்டது.
தமிழ்நாட்டில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சட்டசபைத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களை காட்டிலும் உள்ளாட்சித் தேர்தல்களில் வேட்பாளர்களிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மூலமாக மொத்தம் 12 ஆயிரத்து 838 உறுப்பினர்களின் பதவிகள் நேரடி தேர்தல் மூலமாக நிரப்பப்பட உள்ளது. இது மட்டுமின்றி, மார்ச் 4-ந் தேதி நடைபெறும் மறைமுகத் தேர்தல் மூலமாக 1,298 பதவியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுங்கட்சியான தி.மு.க. முதல் எதிர்கட்சியான அதிமுக வரை தனது தேர்தல் பணிகளை துரிதப்படுத்திவருகின்றனர். இந்தநிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, தேர்தலில் விஜய் படம், விஜய் மக்கள் இயக்க கொடியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கபடுவதாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அதில், கடந்த முறை போல் அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது விஜய்யின் படத்தையும், சங்கத்தின் கொடி மற்றும் பெயரை பயன்படுத்தலாம். மக்கள் எப்படி கடந்தமுறை வாக்களித்து வெற்றி பெற செய்தனர். அதேபோல், இப்போதும் அவர்களுக்கு வாக்களியுங்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்கி மொத்தம் 129 பேர் வெற்றி பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது. ஊரக உள்ளாட்சித் தேர்தலை போன்று, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றால், அடுத்து வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்கலாம் என்றும் எதிர்பார்க்க படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்