Pongal 2023: மயிலாடுதுறை: நரிக்குறவ மக்களுக்கு வாரிசு திரைப்படம் டிக்கெட்டுகளை பொங்கல் பரிசாக வழங்கிய விஜய் ரசிகர்கள்!
மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் நரிக்குறவ மக்களுக்கு வாரிசு திரைப்படத்தின் டிக்கெட்களை இலவசமாக வழங்கி அரிசி காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர்.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு மற்றும் இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு ஆகிய இந்த இரண்டு திரைப்படங்களும் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் பொங்கல் திரைப்படமாக வெளியாகியது. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் இரண்டு பேரின் ரசிகர்களும் திரைப்படத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் மயிலாடுதுறையில் ரத்னா, கோமதி மற்றும் சீர்காழி சிவகுமார் ஆகிய மூன்று திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. படம் வெளியான நாள் முதல் மயிலாடுதுறை மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில், ரசிகர்கள் தியேட்டர் வாசலிருந்து மண்டியிட்டு வந்து ஆளுயரத்திற்கு மேல் உள்ள விஜய் கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்து மாலை அணிவித்து பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நரிக்குறவ மக்களுக்கு பொங்கல் பரிசாக விஜய் நடித்த வாரிசு திரைப்பட டிக்கெட் இலவசமாக வழங்கியுள்ளனர். நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் மயிலாடுதுறையில் இரண்டு தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது .
இந்நிலையில் மயிலாடுதுறை அருகே பல்லவராயன் பேட்டையில் வசித்து வரும் நரிக்குறவர் குடும்பத்தினர் தியேட்டருக்கு வந்து வாரிசு படத்தை பார்ப்பதற்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் அப்பகுதி நரிக்குறவர் குடும்பத்தினருக்கு வாரிசு படத்தின் டிக்கெட்டை இலவசமாக வழங்கினர். தொடர்ந்து அரிசி காய்கறிகள் மளிகை பொருட்கள் ஆகியவற்றை பொங்கல் பரிசாக நரிக்குறவர் குடும்பத்தினருக்கு அளித்தனர். டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்ட நரிக்குறவர் குடும்பத்தினர் ஆர்வத்துடன் தியேட்டருக்குள் சென்று படம் பார்த்தனர்.
TNPSC : தமிழ்நாடு அரசு பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? ஊதியம் எவ்வளவு? முழு விவரம் இதோ!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

