
Vijay BDay Accident: விஜய் பிறந்தநாளில் விபரீத முயற்சி - தீப்பற்றி எறிந்த சிறுவன் உட்பட இருவர், வீடியோ வைரல்
Vijay BDay Accident: நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, சிறுவன் உட்பட இருவரது உடலில் தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vijay BDay Accident: நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, சாகச முயற்சியில் ஈடுபட சிறுவன் உடலில் தீப்பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர் விஜயின் பிறந்தநாள்:
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இருப்பினும், கள்ளக்குறிச்சியில் நேர்ந்த கள்ளச்சாராய மரணங்கள் காரணமாக, அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாமென தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், ரசிகர்கள் பல்வேறு விதமாக விஜயின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அப்படி நடந்த விழாவில் முன்னெடுக்கப்பட்ட சாகச முயற்சி விபரீதமாக முடிவடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் மீது பற்றிய தீ
சென்னை அடுத்த நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில், ரசிகர்கள் சார்பில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது, ஒரு சிறுவன் கையில் தீயிட்டு கொளுத்திக் கொண்டு, ஓடுகளை உடைக்கும் சாகச முயற்சியை முன்னெடுத்தார். அதன்படி, சிறுவனின் கையின் மீது அருகிலிருந்த பயிற்சியாளர் சிறிய பாட்டிலில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீயிட்டுள்ளார். தொடர்ந்து ஓட்டை கையால் அடித்து உடைத்த பிறகும், தீ அணையாததால் ஏற்பட்ட வெப்பத்தை தாங்க முடியாமல் சிறுவன் தவித்துள்ளான். உடனடியாக அருகிலிருந்தவர்கள் சிறுவன் கையில் பற்றிய தீயை அணைக்க முயன்றனர்.
குலுங்கிய பாட்டில், கொழுந்துவிட்டு எரிந்த தீ..!
அப்போது பயிற்சியாளரின் கையில் இருந்த பிளாஸ்டிக் பாட்டில் குலுங்க, அதிலிருந்த பெட்ரோல் அவர் மீதும் அருகிலிருந்த சிறுவனின் மீதும் சிதறிவிழுந்து தீ மேலும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக செயல்பட்டு இருவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாதிக்கப்பட்ட இருவருக்கும் பெரிய காயங்கள் எதுவும் இல்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை புறநகர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஈசிஆர் சரவணன் ஏற்பாட்டில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

