அண்ணாமலைக்கு என்ன ஆச்சு? லண்டன் போய்ட்டு வந்ததில் இருந்துதான் இப்படி - திருமாவளவன் பதிலடி
அண்ணாமலை லண்டன் சென்று வந்த பிறகு ஏன் இப்படி ஆனார் என்பது தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை லண்டன் சென்று வந்த பிறகு ஏன் இப்படி ஆனார் என்பது தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் “அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நகைப்புக்குரியதாக மாறிவிடக்கூடாது. சாட்டையடி போராட்டம் தேவையற்றது. லண்டன் சென்றுவிட்டு வந்த பிறகு அவருக்கு என்ன ஆனாது என்பது தெரியவில்லை. தமிழகத்தில் எதிர்க்கட்சி பாஜக என்பதை காட்டிக்கொள்ள முயல்கிறார் அண்ணாமலை. அரசு மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையது அல்ல. காந்தியடிகள் போல அகிம்சை வழியை கையில் எடுக்கிறாரா எனத் தெரியவில்லை. காந்தியடிகளே இவ்வாறு செய்ய மாட்டார். அரசை குறைக்கூறி பரபரப்பு அரசியல் செய்கிறேன் என்ற பெயரில், எதை எதையோ அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். அதிமுக எதிர்க்கட்சி இல்லை. பாஜகதான் எதிர்க்கட்சி என காட்டிக்கொள்ள அண்ணாமலை முயல்கிறார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. இச்சம்பவத்தில் உடனடியாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும். புதிய உக்திகளை கையாள வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை “திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை செருப்பு அணியமாட்டேன். எனக்கு நானே சாட்டையால் அடித்துக்கொள்வேன். இந்த கேடுகெட்ட ஆட்சியில் வாழ்வது குறித்து நாளை கோவையில் எனது வீட்டின் முன் என்னை நானே சாட்டையால் அடித்து கொண்டு போராட்டம் நடத்துவேன். நாளை காலை 10 மணிக்கு போராடுவோம். கேள்வி கேட்பது எங்கள் வேலை. பதிலளிப்பது அரசின் வேலை. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கேமரா இல்லை என்று சொல்ல வெட்கமாக இல்லையா? கையை உடைப்பதும் காலை உடைப்பதும் தண்டனையா? உண்மையான அரசாக இருந்தால் 15 தண்டனை கொடுத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.