TN Agri Budget: வேளாண் பட்ஜெட் எப்படி இருக்கு? - விவசாயிகள் சங்கம் சொல்வது என்ன?
வேளாண் துறை பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இன்னும் பல அம்சங்கள் தேவை என விவசாயிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறை பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இன்னும் பல அம்சங்கள் தேவை என விவசாயிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சட்டசபையில் விவசாயத்துறையை மேம்படுத்தும் நோக்கில் வேளாண் துறைக்கான பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அவரது அறிவிப்பில் வெளியான பல்வேறு முக்கிய அம்சங்களை கீழே காணலாம்.
- சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்க நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொாகுப்பு அமைத்து பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்களை அறிமுகம் செய்து கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் 2500 ஹெக்டேரில் உயர்த்தி ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கரும்பு விவசாயிகளின் நலன் காக்கும் சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூபாய் 195 கூடுதலாக வழங்கப்படும்.
- தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்திட 200 ஏக்கர்பரப்பளவில் விதை உற்பத்தி செய்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்க ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சிறிய ஊர்களில் வேளாண்மை முழுமையாக வளர்வதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும், மற்ற பணிகளையும் மேற்கொள்வதற்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூபாய் 230 கோடி நிதி ஒதுக்கீடு
- தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் தொடங்கப்பட்டு சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்பட உள்ளது. மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் 82 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் ரூபாய் 64 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்.
- அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க ரூபாய் 26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் சங்கம் தரப்பில்- ஜீவகுமார் கூறுகையில், “மூன்றாவது முறையாக வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் 7 வகையான தட்பவெட்ப நிலை இருக்கிறது, ஒரு இடத்தில் விளைவது வேறு இடத்தில் விளையாது. கிருஷ்ணகிரி பகுதியில் மாம்பலம் விளையும், காவிரி டெல்டா பகுதிகளில் நெல் விளையும். அந்தந்த பகுதிகளில் விளைச்சலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது, இது வரவேற்கத்தக்க விஷயம். வேளாண் தொழில் தட பூங்கா – நாகை திருச்சி பகுதிகளில் அமைக்க ரூ. 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதிகளுக்கு புதிய முகம் கிடைக்கும் என்றார்.
மேலும் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2500 வழங்கப்படும் என உறுதியாக கூறப்படவில்லை. இது ஏமாற்றம் அளிக்கும் விஷயமாகும். குவிண்டாலுக்கு ரூ. 4000 வரை அளிக்கப்பட வேண்டும். அதேபோல் கரும்பு டன்னுக்கு ரூ. 4000 என ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை பற்றிய அறிவிப்பும் வெளியாகவில்லை.
நம்மாழ்வார் விருது, இயற்கை விவசாயம் குறித்த அறிவிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நெல், சிறுதானியம் என அனைத்தையும் அரசாங்கம் கொள்முதல் செய்தால் மட்டுமே உற்பத்தி அதிகரிக்கும் என குறிப்பிட்டார். மேலும் சம்பாவை விட குறுவை சாகிபடி தான் அதிகமாக உள்ளது. ஆனால் குறுவைக்கு பயிர் காப்பீடு தற்போது வரை இல்லை. பயிர் காப்பீடு பற்றி அறிவிப்பு வெளியாக வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இயற்கை உரம் என்பது நமக்கு இயற்கை கொடுத்த சீதனம், அதற்கான நிதி நிலை அறிவிக்கப்படவில்லை. அதேபோல் கடைமடை பாசனத்திற்கான தூர்வரும் பணிகள் எப்போது மேற்கொள்ளப்படும் என்பது பற்றி கூறப்படவில்லை” என கூறியுள்ளார்.