நீட் தற்கொலைகளுக்கு காரணம் திமுக தான் - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
நீட் தேர்வினால் உயிரிழந்து விட்டால் உதவி கிடைக்கும் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த தற்கொலைக்கும் காரணம் அவர்கள் தான்.
பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், கோவை தேவாங்கபேட்டை மேல்நிலைப் பள்ளி அருகில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுடன் உணவு சாப்பிட்ட அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவை தெற்கு தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு ரத்த சோகை பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஊட்டசத்து குறைபாடு இருக்கின்றது என்பதை தமிழக முதல்வர் சொல்லி இருக்கின்றார். ஊட்டசத்து குறைபாடு என்பதற்கு அடிப்படையாக நிறைய காரணங்கள் இருக்கிறது.
போஷன் அபியான் என்ற திட்டம் மூலம் ஊட்டசத்து கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. மத்திய அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்தினாலே, ஊட்டச்சத்து குறைபாடு என்பதே தடுக்க முடியும். தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் சரியாக சென்று சேருவதில்லை. அதை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும். இதனால் தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை கிடைக்காமல் இருக்கும் நிலை இருக்கின்றது. இதை மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஊட்டச் சத்துக்காக புதிய திட்டத்தை செயல்படுத்துகிறேன் என்று கூறி இருப்பது சரியல்ல.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தனியாக விலக்கு கொடுக்க முடியுமா? மீண்டும் ஒரு மாநிலத்துக்கு மட்டும் விளக்கு அளிக்க முடியுமா என்பது சட்ட சிக்கல். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னது தி.மு.க. அதற்கான ரகசியம் தெரியும் என சொன்னவர் தி.மு.க அமைச்சர். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆகியும் கூட இன்னும் அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்றால், இன்னொரு அரசியல் மாற்றம் ஏற்படும் என முதல்வர் நினைத்தால் அதற்கு கனவு என்று அர்த்தம். அடுத்து மத்தியில் அரசியல் மாற்றம் ஏற்படாது. மீண்டும் பா.ஜ.க அரசு தான் அமையப் போகிறது. ஆட்சிக்கு வந்தால் நீட்டை ரத்து செய்வோம் என்பதை போல, இனியும் ஒரு பொய் வாக்குறுதி கொடுத்து தமிழக மக்களை ஏமாற்ற போகின்றது.
ஒவ்வொரு உயிரிழப்பு வரும் போதும், அதற்கு ஒவ்வொரு வகையான பின்னணி, காரணம் இருக்கிறது. எந்த ஒரு குழந்தையும் தற்கொலை செய்ய வேண்டும், பெற்றோர் உயிரிழக்க வேண்டும் என யாரும் நினைக்க மாட்டார்கள். அதே வேளையில் மாணவர் சமுதாயத்தை, நீட்டின் காரணமாக, அது கிடைக்காவிட்டால் நீங்கள் உயிரிழக்கலாம். நீட் தேர்வினால் உயிரிழந்து விட்டால் உதவி கிடைக்கும் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். பெரம்பலூரில் மாணவி இறந்தவுடன் அதை செய்தார்கள் எனக் கூறிய அவர், இந்த தற்கொலைக்கும் காரணம் அவர்கள் தான். கவர்னர் மீது பாய்வதை விட்டு விட்டு தமிழகத்தில் எத்தனையோ தற்கொலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது எனவும்,எல்லா மனித உயிர்களையும் முதல்வர் ஓரே மாதிரி பார்க்க வேண்டும்.
நாங்குநேரி சம்பவம் என்பது அதிர்ச்சிகரமானது. ஒன்றாக பழகி, விளையாடி சகோதரத்துவத்தை ஏற்படுத்த வேண்டிய வயதில் இந்த சம்பவம் அதிர்ச்சியாக இருக்கிறது. சமூக நீதி பேசுகின்ற மாநிலத்தில் இளம் வயதில் இருக்கும் மாணவர்கள் இம்மாதிரியாக ஏதோ ஒரு வகையில் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். அது கலையாகவும் இருக்கலாம். சுற்றி இருக்கக் கூடிய நபர்களின் தாக்கமாகவும் இருக்கலாம். சமூக நீதிப் பேசும் இடம், பெரியார் மண் இந்தியாவிற்கே சமூக நீதியை காட்டுகின்றோம் என்று பேசிக் கொண்டு இருந்த இவர்களால், சமூக நீதியை மாணவர்களிடம் கூட கொண்டு சேர்க்க முடியவில்லை என்பது மோசமான விஷயமாக பார்க்கிறோம். இது பேசுவதற்கும் செயல்படுவதற்கும் வித்தியாசமாக இதை பார்க்கிறோம். ஒவ்வொரு திரைப்படமும் ஒரு சில தாக்கங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். பிரிவினையை வைத்து வெறுப்பினை விதைக்கின்ற பல்வேறு விதமான விஷயங்கள் நம்மை சுற்றி நடந்து கொண்டு இருக்கிறது. இதை கவனத்துடன் அணுக வேண்டும். மாமன்னன் படம் 4 நாட்களுக்கு முன்பு பார்த்தேன். அந்தப் படத்தின் கருத்து அற்புதமான கருத்து. ஆனால் அது இன்னமும் சமுதாயத்தில் தொடர்கின்றது என்பதை தி.மு.க.விற்கு அவமானகரமான விசயமாக பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.