'கமல்ஹாசன் ஒரு கட்சி தலைவர் அல்ல. திமுக, காங்கிரஸ் கூட்டணியின் நட்சத்திர பேச்சாளர்’ - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
கமல்ஹாசனை ஒரு கட்சியின் தலைவராக பார்க்க முடியாது. ஊழல் கரை படிந்த திமுக, காங்கிரஸ் கூட்டணியின் நட்சத்திர பேச்சாளர் என்பது தான் அவர் நிலைமை.
கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”ஒவ்வொரு நாளும் பட்டப்பகலில் நடந்து கொண்டிருக்கும் படுகொலைகள் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா என்ற கேள்விக்குறியை ஏற்படுதியுள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் தமிழகம் அமைதி பூங்கா என சொல்லும் நிலையில் இருந்து வெகு சீக்கிரமாக கீழிறங்கி சென்று கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது. மாநில அரசாங்கம் தொடர்புடைய நபர்கள் நடத்தும் நிறுவனங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது தான் கவலைப்படுகிறார்கள் போலியிருக்கிறது. மாநில முதல்வர் உடனடியாக சட்டம் ஒழுங்கை கவனிக்க வேண்டும். தமிழகம் என்றும் அமைதி பூங்கா என்பதை நிரூபிக்கும் வகையில், காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து இம்மாதிரி எந்த நிகழ்வும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.
கோவையை பொருத்தவரை பல்வேறு கோரிக்களை நான் சட்டமன்றத்தில் எழுப்புகிறேன். சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளிக்கிறார்கள். சட்டமன்றத்தில் கோவையில் குடிநீர் பிரச்சனை 15 நாளில் சீராகும் எனச் சொன்னார்கள். அதுவரை லாரிகளில் கொண்டு வந்து தண்ணீர் தர வேண்டும் என கோரினேன். ஆனால் அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. அதேபோல உக்கடம் மேம்பாலம் பணிக்காக இடம் மாற்றப்பட்ட 300 தூய்மை பணியாளர்களுக்கு புதிய குடியிருப்பு கட்டித்தர வேண்டும். அதற்கு மீன் மார்க்கெட் அகற்றப்பட வேண்டும். இதனைச் செய்ய காலதாமதம் செய்ததால் திட்ட மதிப்பீடு அதிகரித்துள்ளது. வீடு அவர்களுக்கு கட்டித்தருவார்களா என்ற சந்தேகம் அந்த மக்களிடம் உள்ளது. மீண்டும் அதே இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போறோம். மாற்றத்தை கொண்டு வரப்போகிறோம் என அரசியலுக்கு வந்தார்கள். ஆனால் கமல்ஹாசன் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது வந்து பத்திரிகையாளர்களிடம் ஸ்டேட்மெண்ட் மட்டுமே தருகிறார். மக்கள் பணி செய்யவில்லை. கோவையில் நிற்பதும், நிற்காததும் அவர் விருப்பம். அதை அவர் முடிவெடுக்கட்டும். ஆனால் நான் கேட்பது ஆட்சியை பிடிக்க கட்சி ஆரம்பித்த நீங்கள் காங்கிரஸ் போன்ற ஊழல் கட்சியோடு சேர்ந்து கொண்டு, திமுகவோடு சேர்ந்து கொண்டு மாற்றத்தை தரப்போகிறேன் என்றால், உங்கள் அரசியல் கணக்கு என்ன? கமல்ஹாசனை ஒரு கட்சியின் தலைவராக பார்க்க முடியாது. ஊழல் கரை படிந்த திமுக, காங்கிரஸ் கூட்டணியின் நட்சத்திர பேச்சாளர் என்பது தான் அவர் நிலைமை. தேர்தல் பிரச்சாரத்திற்கு அவரையும் அழைத்து வந்து பிரச்சாரம் செய்யலாம். எந்த தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை கட்சி தலைமை எடுக்கும் முடிவு. எங்களை பொருத்தவரை பாஜக தொண்டர்கள் எந்த இடத்தில் நிறுத்தினாலும், வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டுமென வேலை செய்கிறோம். எல்லா தொகுதிகளிலும் எங்களது அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த வேலை செய்கிறோம்.
கர்நாடக தேர்தலை பொருத்தவரை பாஜக வெற்றி வாய்ப்பு நாளுக்கு நாள் பிரகாசமாகி கொண்டிருக்கிறது. கட்சியில் இருந்து சில தலைவர்கள் வெளியே சென்றிருப்பதால், பின்னடைவு ஏற்படும் என சில அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். ஆனால் களத்தில் நிலைமை அப்படி இல்லை. இது ஒரு வித்தியாசமான கட்சி. எவ்வளவு பெரிய தலைவர்கள் இந்த கட்சியில் இருந்து சென்றாலும், தொண்டர்கள் அவருடன் செல்ல தலைவர்களை பின்பற்றும் அரசியல் கட்சியல்ல இது. அதனால் சில தலைவர்கள் சென்றிருந்தாலும், தொண்டர்கள் முழுக்க முழுக்க கட்சியோடு இருக்கிறார்கள். கடந்த முறை போல இல்லாமல், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அளவிற்கு மிக நன்றாக ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக மாநில தலைவர் விளக்கம் அளித்துவிட்டார். நிகழ்ச்சி நடந்து முடிந்து விட்டது. பின் எதற்கு போஸ்ட் மார்ட்டம் பண்ண வேண்டும்?” எனத் தெரிவித்தார்.