"ஈடு செய்யமுடியாத பேரிழப்பு" - ராசாவின் மனைவி மறைவுக்கு வைகோ இரங்கல்
ஆ.இராசா அவர்களின் வாழ்வினையர் திருமதி பரமேசுவரி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் 'திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் ஆ.இராசா அவர்களின் வாழ்வினையர் திருமதி பரமேசுவரி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன்.
திராவிட இயக்கத்தின் ஈடற்ற தளகர்த்தராக ஆ.இராசா அவர்கள் பொது வாழ்வில் சிகரங்களை எட்டுவதற்கு காரணமாக இருந்த இணையரை இழந்து இருக்கிறார். அரசியலில் சோதனைகள், வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் அனைத்திலும் ஆ.இராசா அவர்களுக்கு தோன்றாத் துணையாக இருந்த அவரது வாழ்வினையர் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. மனைவியை இழந்து கண்ணீர் கடலில் தவிக்கும் ஆ.இராசா அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அறிய: 'உங்க போஸ்ட்பெய்ட் சிம் ப்ரீபெய்டா மாறணுமா?' ஒரே OTP தான் - வருகிறது புதிய முறை!
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் பார்த்து நலம் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கீமோதெரபி சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது.
இருப்பினும், கடந்த சில தினங்களாக பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டார். ஆ.ராசா உள்பட குடும்பத்தினர் மருத்துவமனையில் பரமேஸ்வரியின் உடனிருந்து கவனித்து வந்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் 'தி.மு.கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் வாழ்விணையர் பரமேஸ்வரி மரணமடைந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.'
'திராவிடத் தத்துவத்தினை அரசியல் பாடமாகப் பயின்று பொதுவாழ்வில் ஈடுபட்ட ஆ.ராசாவின் உயர்விலும் - தாழ்விலும், நெருக்கடிகளிலும் - சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடனிருந்து அவரது வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர் பரமேஸ்வரி. அவரது மறைவு ஏற்படுத்தும் பெருந்துயரால் வேதனையில் வாடும் ஆ.ராசாவின் கரங்களைப் பற்றி ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.' என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் ராசாவின் மனைவி மறைவுக்கு பல அரசியல் தலைவர்களும் , பிரபலங்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.