Vachathi: வாச்சாத்தி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அரசு வேலை; தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
வாச்சாத்தி கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும் ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும் ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதில், அரசு வேலை அளிக்க இயலாத பட்சத்தில், சுயதொழில் தொடங்க அரசு உதவி செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கும் 10 லட்ச ரூபாய் நிவாரணத்தில், ரூ.5 லட்சத்தைக் குற்றவாளிகளிடம் இருந்து வசூல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் யாரேனும் ஜாமீனில் இருந்தால், அவர்களை உடனடியாகக் கைது செய்ய, கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் யாரேனும் இறந்திருந்தால், நிவாரணத் தொகையை அவரின் குடும்பத்துக்கு வழங்கவும் நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடந்தது என்ன?
1990களில் சந்தனமரக் கடத்தல் வீரப்பன் நடமாடி வந்த தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த மகள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாக தமிழக வனத்துறையினர் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதியன்று ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றிவளைத்து பலமணி நேரத் தேடுதல் வேட்டையை நடத்தினர். இதன் முடிவில், வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 133 பேரை கைது செய்தனர். அவர்களில் 90 பேர் பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள் ஆவர்.
அதேசமயம், சந்தனக் கட்டை கடத்தலுக்கும் தங்களுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்த வாச்சாத்தி கிராமத்தினர், இந்த விசாராணை மற்றும் தேடுதல் நடவடிக்கையின்போது கூட்டுக்குழுவில் இடம்பெற்ற வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள், வாச்சாத்தியைச் சேர்ந்த 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தனர்.
கிராம மக்களுக்கு வன்கொடுமை
மேலும் கிராம மக்கள் அனைவரும் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்களின் குடிசைகள் தகர்க்கப்பட்டு, வீட்டிலிருந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தினர். இந்த புகார்களை அன்றைய மாநில அரசு ஆரம்பத்தில் மறுத்தது. அதே சமயம் இதுதொடர்பாக 1992 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி முறையான புகார் பதிவு செய்யப்பட்டது.
இதில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக தருமபுரி மாவட்ட விசாரணை நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி அறிவித்தார். இவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது.
கள ஆய்வில் ஈடுபட்ட நீதிபதி
இதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வாச்சாத்தி மலை கிராமத்தில், நீதிபதி வேல்முருகன் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் இன்று (செப்டம்பர் 29) நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்து உள்ளார்.
அரசு வேலை, ரூ.10 லட்சம் நிவாரணம்
தீர்ப்பில், வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும் ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதில், அரசு வேலை அளிக்க இயலாத பட்சத்தில், சுயதொழில் தொடங்க அரசு உதவி செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கும் 10 லட்ச ரூபாய் நிவாரணத்தில், ரூ.5 லட்சத்தைக் குற்றவாளிகளிடம் இருந்து வசூல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் யாரேனும் ஜாமீனில் இருந்தால், அவர்களை உடனடியாகக் கைது செய்ய, கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் யாரேனும் இறந்திருந்தால், நிவாரணத் தொகையை அவரின் குடும்பத்துக்கு வழங்கவும் நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல அப்போதைய எஸ்.பி, மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.