77 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகம் முழுவதும் 77 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பு காரணமாக தினசரி 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், 250-க்கும் மேற்பட்டோர் தினசரி உயிரிழந்து வருகின்றனர். இதைத் தடுப்பதற்கு மாநில அரசு பல்வேறு தடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், மருத்துவமனைகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். பின்னர். நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் 100 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையமும், சென்னை விருகம்பாக்கத்தில் 100 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையமும் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று சென்னை லயோலா கல்லூரியில் 100 படுக்கை வசதிகொண்ட கொரோனா தடுப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையத்திற்கு என சிறப்பு தொலைபேசி எண்ணாக 90254 52222 செயல்படும்.
அரசு பொது மருத்துவமனைகளில் 995 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர, 595 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சென்னை மாநகராட்சியால் இன்று வர உள்ளன. இந்த செறிவூட்டிகளை ஆக்சிஜன் அதிகளவில் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பும் பணிகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 11 ஆயிரத்து 800 களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பாதித்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். இதனால், நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வருவது மன நிம்மதியை தருகிறது.
இதுதவிர, சென்னை மாநகராட்சியின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுககு மண்டலவாரியாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு நேரடியாக சென்று அவர்களுக்கு தேவைப்படும் சிகிச்சைகளை அளிக்கும் முறை மாநகராட்சி மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை முற்றிலும் அழிக்க தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிக அவசியம். தமிழகத்தில் 77 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை முகாம்கள் அமைக்கப்பட்டு தினசரி 30 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வர் 1.5 கோடி தடுப்பூசியை மத்திய அரசின் மூலமும், மீதமுள்ள 3.5 கோடி தடுப்பூசியை உலகளாவிய டெண்டர் மூலமும் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்” என்றார்.