உத்தரகண்ட் மேகவெடிப்பு: மாயமான கேரள சுற்றுலா பயணிகள் 28 பேர் பத்திரமாக மீட்பு! பரபரப்பு தகவல்!
உத்தரகண்ட் மேகவெடிப்பைத் தொடர்ந்து பேரிடரில் மாயமானதாகக் கருதப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் தராலி என்ற மலைக்கிராமம் உள்ளது. முக்கிய ஆன்மிக தலமான கங்கோத்ரி செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 648 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் தராலி கிராமத்தில் ஏராளமான உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று அங்கு திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. அதாவது, அதிகனமழை கொட்டித் தீர்த்தது. வானத்தில் இருந்து அருவி கொட்டுவதைப் போல் பெய்த மழை காரணமாக கீர் கங்கா ஆற்றில் பேரழிவு தரும் பெரு வெள்ளம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த பெரு வெள்ளம், தராலி மலைக்கிராமத்துக்குள் புகுந்தது. மலைப்பகுதிகளில் இருந்து வந்த பெரு வெள்ளம், அங்கிருந்த கட்டிடங்களை வாரி சுருட்டியபடி ஓடியது.
திடீரென வந்த வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியானார்கள், பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். பலர் மாயம் ஆகியுள்ளதால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, கேரளாவைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்டிற்கு சுற்றுலா சென்ற கேரள குழுவைச் சேர்ந்தவர்கள் நேற்று காலை 8.30 மணியளவில் உத்தரகாசி செல்வதாக புறப்பட்டுச் சென்றனர். ஆனால் அவர்களை அதன்பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உறவினர் ஒருவர் கூறியுள்ளார். ஹரித்வாரைச் சேர்ந்த டிராவல் ஏஜென்சி வாயிலாக அவர்கள் பயணித்ததாகவும், டிராவல் ஏஜென்சியாலும் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கேரள சுற்றுலாப் பயணிகளின் கதி என்ன என்று தெரியாததால் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர்ந்து, (ஆக.5) மதியம் மிகப் பெரியளவில், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டு, ஏராளமான குடியிருப்புக் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட சுற்றுலாக் குழுவொன்று மாயமானதாகவும், அவர்களது நிலைக் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் அவர்களது உறவினர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், அப்பகுதியின் சாலைகள் முடக்கப்பட்டதால், ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட அவர்கள் அனைவரும், பேரிடர் ஏற்பட்ட கங்கோத்ரியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் தற்போது பத்திரமாகவுள்ளதாகவும், திரும்பி வருவதற்கான பாதைகள் அனைத்தும் முடங்கியதால், அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவலை, உத்தரகண்டின் மலையாளி சமாஜம் தலைவர் தினேஷ் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், சுற்றுலாக் குழுவினரின் வாகன ஓட்டுநர் அவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என உறுதியளித்ததாகக் கூறியுள்ளார்.இத்துடன், சுற்றுலாப் பயணிகளின் வாகனம் எங்குள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டதை அவர்களது உறவினர்களும் உறுதி செய்துள்ளனர். முன்னதாக, உத்தரகாசியில் ஏற்பட்ட பேரிடரில் ஏராளமானோர் மாயமானதாகக் கருதப்படும் நிலையில், மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம், தீயணைப்புப் படை, காவல் துறை உள்ளிட்ட ஏராளமான படைகள் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





















