ADMK- BJP Seat Sharing : அவ்வளவு இடங்களுக்கெல்லாம் நோ.. பாஜகவிடம் கறார் காட்டும் அதிமுக.... நீடிக்குமா கூட்டணி?
TN Urban Local Body Election 2022: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அடித்தளமாக கொண்டு தமிழக அரசியலில் ஒரு வலுவான சக்தியாக உருவாகுவதற்கு பாஜக முயற்சித்து வருகிறது
கடலூர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக- பாஜக-வுடனான இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து மாநகராட்சிகளிலும், தமிழக பாஜக கோரிய 20% இடங்களுக்குப் பதிலாக 10% இடங்களை மட்டுமே அதிமுக தலைமை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று, திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. " நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அஇஅதிமுக-வுடனான இடப்பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும். இதுதொடர்பான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாஜக வலிமையுடன் இருக்கக்கூடிய பகுதிகளில் கவுரமான இடங்களை எதிர்பார்க்கிறோம். மாநிலத்தின் பெரிய கட்சி பெருந்தன்மை உணர்வுடன் சிறிய கட்சிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
பாஜக-வுடனான இடப்பங்கீடு முழுமையடையாத நிலையில், கடலூர்,விழுப்புரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக நேற்றிரவு வெளியிட்டது.
அதிமுக- வுடனான பேச்சு வார்த்தை குறித்து கருத்து தெரிவித்த மூத்த பாஜகத் தலைவர் ஒருவர், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 30% இடங்களை, குறிப்பாக கோயம்பத்தூர், திருச்சி, திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கேட்டிருந்தாம். பின்பு, 20% இடங்களாக குறைத்துக் கொண்டோம். அஇஅதிமுக வுடனான கூட்டணியைத் தொடரவே டெல்லி தலைமை விரும்புகிறது. சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, தமிழகத்தில் கூட்டணியை முறித்துக் கொண்டால், நடைபெறவுள்ள ஐந்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இது தவறாக பிரதிபலிக்கும். கூட்டணி தர்மத்தை பாஜக வலிமையாக கொண்டுள்ளது என்ற கருத்தை தற்போது கொண்டு செல்ல வேண்டும் என்று பாஜக தலைமை விரும்புகிறது" என்று தெரிவித்தார்.
பாஜக- வுடனான பேச்சு வார்த்தை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அரசியலில் நம் அனைவருக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு. ஆனால், அதிமுக என்ற பேரியக்கத்தின் தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். பாஜக அதிக எண்ணிக்கையிலான இடங்களை கேட்கிறது. இருந்தாலும், ஒருமனதாக இடப்பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கை தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அடித்தளமாக கொண்டு தமிழக அரசியலில் ஒரு வலுவான சக்தியாக உருவாகுவதற்கு பாஜக முயற்சித்து வருகிறது. அதிமுக-வுடனான இடப்பங்கீடு குறித்த சில முக்கியமான முடிவுகளை மாநில பாஜகத் தலைவர் அண்ணாமலை இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். முன்னதாக, சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டது. திமுக அதன் தோழமை கூட்டணி கட்சிகளுடன பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.