Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Lower Berths allotment: ரயில்களில் தினந்தோறும் பல கோடி மக்கள் பயணம் செய்து வரும் நிலையில், பெண்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் லோயர்பெர்த் ஒதுக்கீடு தொடர்பாக முக்கியமான அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரயிலில் பயணம்- பொதுமக்கள் விருப்பம்
இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு ரயில் சேவையை பொதுமக்கள் பெரிதும் விரும்பி வருகிறார்கள். பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், குறைந்த கட்டணம் போன்ற காரணங்களால் பல கோடி மக்கள் தினமும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். நாடு முழுவதும் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளது. இந்திய ரயில்வேயில் தினமும் சுமார் 13,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் பண்டிகை தினம் என்றால் கேட்கவே வேண்டாம். பாத்ரூமில் கூட பயணம் செய்யும் நிலை உள்ளது.
லோயர்பெர்த் ஒதுக்கீடு
இதனை கருத்தில் கொண்டு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பயணிகள் கூட்டமானது ஓரளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இதே போன்று வயது மூத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கும் போது லோயர்பெர்த் கிடைக்காமல் அப்பர் பெர்த் கிடைத்து வருகிறது. இவர்களால் அப்பர் பெர்த்தில் ஏற முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே மற்ற பயணிகளிடம் மாற்றம் செய்து பயணிக்கும் நிலை உள்ளது. அதிலும் ஒரு சிலர் லோயர்பெர்த் விட்டுக்கொடுப்பார்கள். பெரும்பாலானோர் விட்டுக்கொடுக்காமல் மறுப்பார்கள். இந்த நிலையில் பெண்களுக்கு குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இனி ரயிலில் லோயர்பெர்த் ஒதுக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே அமைச்சர் முக்கிய அறிவிப்பு
இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில்,ரயில்வே துறை சார்பாக மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ரயிலில் பயணம் செய்யும் போது லோயர்பெர்த் கிடைக்காத நிலை உள்ளது. எனவே இவர்களுக்காக முன்பதிவின் போது எந்த படுக்கை வசதி ஒதுக்க வேண்டும் என்ற விருப்பத்தை பூர்த்தி செய்யாவிட்டாலும் முன்னுரிமை அடிப்படையில் 45 வயது அல்லது அதற்கு மேல் உள்ள பெண்களுக்கு லோயர்பெர்த் ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு லோயர்பெர்த்
பெண்களுக்காக இரண்டாம் வகுப்பு ஒரு ஸீலீப்பர் பெட்டியில் 6 முதல் 7 லோயர்பெர்த் ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் 3ஆம் வகுப்பு குளிர்சாதன வகுப்பு ஒரு பெட்டியில் 4 முதல் 5 லோயர்பெர்த் ஒதுக்கப்படும், இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி ஒன்றில் 3 முதல் 4 லோயர்பெர்த் ஒதுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமில்லாமல் ரயில் பயணத்தின் போது காலியாக லோயர்பெர்த் இருந்தால் அதில் முன்னுரிமை அடிப்படையில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணியருக்கு அந்த இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகள் பயணிகள், கண் பார்வை குறைபாடு உடைய பயணிகளுக்காக அகலமான பெர்த்தகள், இருக்கை இடங்கள் அகலப்படுத்தப்படும் எனவும், 'ப்ரெய்லி' எழுத்துகளுடன் கூடிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தனது பதிலில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.





















