AmitShah Speech: மு.க.ஸ்டாலின் வைத்த சரமாரி குற்றச்சாட்டுகள்.. பட்டியல் போட்டு பதில் அளித்த அமித்ஷா...!
ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா, வேலூரில் நடைபெற்ற 9 ஆண்டு சாதனை விளக்கக் கூட்டத்தில் பதில் அளித்துள்ளார்.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசியல் களம் சூடிபிடிக்க தொடங்கியுள்ளது. மத்தியில் 9 ஆண்டு காலமாக ஆட்சியில் உள்ள பாஜக மூன்றாவது முறையாக வென்று ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. அதற்காக தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகளை குறிவைத்து வேலை செய்ய தொடங்கிவிட்டது.
முதலமைச்சர் கேள்வி:
இச்சூழலில், கடந்த முறை போலவே, வரலாற்று வெற்றியை பெற திமுக கூட்டணி முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த தேர்தலை போல இந்த முறையும் பாஜக எதிர்ப்பை கையில் எடுத்து வெற்றி பெற திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, நேற்று சேலத்தில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அமித்ஷாவின் தமிழ்நாடு வருகை குறித்து கடுமையாக சாடினார். "அமித்ஷா சென்னை வருவது பரபரப்பு செய்திகளாக வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது தெரிகிறது.
கடந்த 9 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் கொண்டு வந்த சிறப்புத் திட்டங்களை பட்டியலிட்டு சொல்ல வேண்டும். அதற்கு அமித்ஷா தயாராக இருக்கிறாரா...? மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது ஏராளமான திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு தற்போது 80 சதவீதம் பணிகள் நிறைவடைய திமுகதான் காரணம். மத்திய அரசின் நிதியில் 11 சதவீத நிதியை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த பெருமை திமுகவுக்குத்தான் உள்ளது. தமிழை செம்மொழியாக்கியது, 56 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டப்பணிகள் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
பட்டியல் போட்டு பதிலளித்த அமித்ஷா:
இந்நிலையில், ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா, வேலூரில் நடைபெற்ற 9 ஆண்டு சாதனை விளக்கக் கூட்டத்தில் பதில் அளித்துள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வின் குற்றச்சாட்டுகளுக்கு பட்டியல் போட்டு பதில் அளித்த அவர், "தமிழ்மொழியின் சிறப்பை மேம்படுத்தும் வகையில் பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழர்களின் தொன்மையான செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்தவர் பிரதமர் மோடி. காசி, குஜராத்தில் தமிழ் மொழியின் பெருமையை பரப்பிவர் பிரதமர் மோடி.
திருக்குறள் 23 மொழிகளில் மொழிப்பெயர்க்க காரணமாக இருந்தவர் பிரதமர் மோடி. சீன அதிபரை பிரதமர் மோடிதான் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தார்.சிஆர்பிஎஃப், நீட் ஆகிய தேர்வுகளை தமிழில் எழுத பிரதமர் வழிவகுத்தார். கடந்த 2 ஆண்டுகளில் 2352 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டு காலத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு 72 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் செலவில் என்.எல்.சி.யில் புதிய திட்டம் செல்படுத்தப்பட உள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 84 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்காக 62 லட்சம் கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் திட்டம் மூலம் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 11 மாவட்டங்களில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர்" என்றார்.