Ungalil Oruvan CM Stalin : மகிழ்ச்சியான செய்தி இதுதான்...சிரித்துக்கொண்டே நச் பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!
உங்களில் ஒருவன் பதில்கள் என்ற தொடரின் மூலம் பல்வேறு கேள்விகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதில் அளித்து வருகிறார்.
![Ungalil Oruvan CM Stalin : மகிழ்ச்சியான செய்தி இதுதான்...சிரித்துக்கொண்டே நச் பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! Ungalil oruvan pathilgal Tamil Nadu MK Stalin elated over supreme court judgements being translated in Tamil Ungalil Oruvan CM Stalin : மகிழ்ச்சியான செய்தி இதுதான்...சிரித்துக்கொண்டே நச் பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/30/a8c817fede38e800672e1b4353b6bf8a1675076652583224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகி வந்தது. ஆனால், மாநில மொழிகளிலும் தீர்ப்பு வெளியிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. அதை நிறைவேற்றும் வகையில், இந்திய தலைமை நீதிபதி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக கொண்டுவரப்பட்ட ஆன்லைன் ஆய்வு மென்பொருளின் திறப்பு விழாவில் பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "நாட்டில் உள்ள 99.99% குடிமக்களுக்கு ஆங்கிலம் புரிந்துகொள்ளக்கூடிய மொழி அல்ல என்பதால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இனி இந்தி, தமிழ், குஜராத்தி மற்றும் ஒடியா ஆகிய நான்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்" என்றார்.
இந்த அறிவிப்பை மேற்கோள் காட்டி பேசியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த அறிவிப்பு தனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உங்களில் ஒருவன் பதில்கள் என்ற தொடரின் மூலம் பல்வேறு கேள்விகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதில் அளித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் கிடைத்த மகிழ்ச்சியான செய்தி என்ன என அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்ச நீதின்றத்தின் தீர்ப்பு வெளியாகி இருப்பதுதான் தனக்கு மகிழ்ச்சியான செய்தி என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கான உத்தரவை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வெளியிட்டிருந்தார்.
இந்தியாவின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் ஆக வேண்டும் என திமுக சார்பில் தொடக்க காலத்தில் இருந்தே குரல் கொடுத்து வருகிறோம்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம்.
உச்ச நீதிமன்றத்தின் கிளை தமிழ் நாட்டில் அமைய வேண்டும் என சொல்லி வருகிறோம். இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது முதல் படியாக கருதுகிறேன். மற்ற கோரிக்கைகள் அடுத்தடுத்து நடக்கும் என நம்புகிறேன்" என்றார்.
கொலிஜியம் விவகாரத்தில் நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் தொடர் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "இந்த மோதல் ஆரோக்கியமானது அல்ல.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக உள்ள நீதித்துறையில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இதுதான் திமுகவின் விருப்பம்.
ஆனால், நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியம் அமைப்பில் மத்திய அரசு பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்ற மத்திய அரசின் விருப்பம் முறை அல்ல" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)